கான்வே அரைசதம் வீண்: பெங்களூரு வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கான்வே
கான்வே


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

174 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னைக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே நல்ல தொடக்கத்தைத் தந்தனர். கெயக்வாட் நிதானம் காட்ட கான்வே துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பெங்களூருவின் சிறப்பான பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கா ஓவரில் இருவரும் தலா 1 சிக்ஸர் அடித்ததையடுத்து, ரன் சற்று உயர்ந்தது. பவர் பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்தது.

இதன்பிறகு முதல் ஓவரை வீசிய ஷபாஸ் அகமது மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். இதற்குப் பலனாக கெய்க்வாட் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

3-வது வரிசை வீரராகக் களமிறங்கிய ராபின் உத்தப்பா, கிளென் மேக்ஸ்வெல் பந்தில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தும் மொயீன் அலி களமிறக்கப்படாமல் அம்பதி ராயுடு களமிறக்கப்பட்டார். அவர் ஒரு சிக்ஸர் அடித்தாலும், மேக்ஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் 10 ரன்னுக்கு போல்டானார்.

சென்னை அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு, கான்வேவுடன் இணைந்து மொயீன் அலி பாட்னர்ஷிப் அமைத்தார்.

கான்வே ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து வந்தார். 33-வது பந்தில் அவர் அரைசதத்தை எட்டினார். ஆனால், 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஹசரங்கா பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் அடுத்த ஓவரிலேயே 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

கடைசி 3 ஓவரில் சென்னை வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டன. ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்தை மொயீன் அலி சிக்ஸருக்கு அனுப்பினாலும் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு, அந்த ஓவரை ஹர்ஷல் சிறப்பாக வீசியதால், மொத்தமே 8 ரன்கள்தான் கிடைத்தன. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே மகேந்திர சிங் தோனியும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தை டுவைன் பிரிடோரியஸ் சிக்ஸருக்கு அனுப்பினாலும், அடுத்த பந்தில் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மகேஷ் தீக்ஷனாவும் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் இலக்கை அடைய முடியவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com