ரோஹித், இஷான் சிறப்பான துவக்கம்: குஜராத் அணிக்கு 178 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 06th May 2022 09:39 PM | Last Updated : 06th May 2022 09:39 PM | அ+அ அ- |

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரின் 51ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், ரோஹிக் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தனர். அணியின் ஸ்கோர் 74 ரன்களாக இருந்தபோது ரோஹித் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷனும் 45 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த பேட்டர்களான சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டேனியல் சாம்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் களம்கண்ட டிம் டேவிட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. 21 பந்துகளை சந்தித்த டிம் டேவிட் 44 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். குஜராத் அணியில் ரஷித்கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...