டேவிட் செய்த தவறு: 3 ரன்களில் ஹைதராபாத் 'த்ரில்' வெற்றி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.
இஷான் கிஷன்
இஷான் கிஷன்


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.

முன்னெப்போதும் இல்லாத தொடக்கம்:

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் மும்பைக்கு நல்ல தொடக்கத்தையே தந்தனர். சிக்ஸரும், பவுண்டரியும் பறந்ததால், நல்ல நிலையிலேயே ரன் ரேட் இருந்தது. பவர்பிளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, ரன் ரேட்டில் சற்று மந்த நிலை இருந்தது. இந்த நிலையில், உம்ரான் மாலிக் 9-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் ரோஹித் பவுண்டரி அடிக்க, கிஷன் சிக்ஸரை பறக்கவிட மும்பை 17 ரன்கள் விளாசியது.

இதனால், 10 ஓவர்கள் முடிவில் மும்பை விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் சேர்த்து நல்ல நிலையை அடைந்தது.

மீண்டும் வாஷிங்டன் சுழலிலேயே சிக்கிய ரோஹித்:

அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் சுழலில் ஆட்டமிழந்தார். உம்ரான் மாலிக் வீசிய அடுத்த ஓவரில் கிஷன் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மிரட்டல் மாலிக்:

மீண்டும் 15-வது ஓவரை வீச வந்த மாலிக் திலக் வர்மா (8), டேனியல் சாம்ஸ் (15) விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார். இதனால், ஹைதராபாத் பக்கம் வெற்றிக் காற்று வீசியது.

ட்விஸ்ட் வைத்த டேவிட்:

ஆனால், டிம் டேவிட் வேறு ஒரு கதை வைத்திருந்தார். நடராஜன் வீசிய 16-வது ஓவரில் டேவிட் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். புவுனேஸ்வர் குமாரும் 17-வது ஓவரில் 9 ரன்களை கொடுத்தார். இதனால், கடைசி 3 ஓவரில் மும்பை வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டன.

நடராஜன் மீண்டும் 18-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் நடராஜனால் யார்க்கர் பந்தை சரியாக வீச முடியவில்லை. விளைவு, ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 4 சிக்ஸரை பறக்கவிட்டார் டிம் டேவிட். 13 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே என்ற நிலையை உருவாக்கி வெற்றிக்கான காற்றை மும்பை பக்கம் திருப்பினார் டேவிட்.

ட்விஸ்டுக்கே ட்விஸ்ட் வைத்த டேவிட்:

ஆனால், இந்த முறையும் டேவிட் வேறு ஒரு கதை வைத்திருந்தார். நடராஜன் ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாத இடத்தில் ஒரு ரன் எடுக்க முயன்று தானே தனது ரன் அவுட்டுக்கு காரணமாகிவிட்டார் டேவிட். அவர் 18 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்.

19-வது ஓவரை மெய்டனாக வீச முடியுமா?

மும்பை வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை, 2-வது பந்தில் சஞ்சய் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். அடுத்து ஜாஸ்பிரித் பும்ரா களமிறங்கினார். யார்க்கர் பந்தை சிறப்பாக செயல்படுத்திய புவனேஷ்வர் ரன் கொடுக்கவில்லை. கடைசி ஓவரில் ரமண்தீப் சிங் ஸ்டிரைக்குக்கு வர வேண்டும் என்பதால், கடைசிப் பந்தில் ரன் எடுக்கவில்லை. இதனால், அந்த ஓவர் மெய்டன் ஓவராக அமைந்தது.

சிக்ஸர் அடித்தும் பயனில்லை:

கடைசி ஓவரை ஃபரூக்கியிடம் ஒப்படைத்தார் வில்லியம்சன். அவரும் சிறப்பாகப் பந்துவீசி கட்டுப்படுத்தினார். ஒரு பவுண்டரி, கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸர் கொடுத்தாலும் மும்பை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com