உலக சாதனைக்கு அருகில் சென்ற ராகுல் - டி காக் ஜோடி: சாதனைப் புள்ளிவிவரங்கள்

ஐபிஎல் போட்டியில் கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார்  டி காக்
உலக சாதனைக்கு அருகில் சென்ற ராகுல் - டி காக் ஜோடி: சாதனைப் புள்ளிவிவரங்கள்

டி20 கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த 2-வது ஜோடி என்கிற பெருமையை கே.எல். ராகுல் - டி காக் பெற்றுள்ளார்கள்.

கேகேஆர் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னெள அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னெள அணி, நம்பமுடியாத விதத்தில் 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் எடுத்தது. குயிண்டன் டி காக் 70 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 140 ரன்களும் ராகுல் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் எடுத்தார்கள். இலக்கை நன்கு விரட்டினார்கள் கேகேஆர் பேட்டர்கள். நிதிஷ் ராணா, ஷ்ரேயஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங், சுநீல் நரைன் ஆகியோர் அதிரடியாக விளையாடி லக்னெள அணிக்கு நெருக்கடி அளித்தார்கள். ஸ்டாய்னிஸ் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்கிற நிலையில் 1 பவுண்டரியும் 2 சிக்ஸர்களும் அடுத்தடுத்து அடித்தார் ரிங்கு சிங். 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை எனும்போது 40 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் உமேஷ் யாதவை போல்ட் செய்து லக்னெள அணிக்குப் பரபரப்பான வெற்றியை அளித்தார் ஸ்டாய்னிஸ்.

இந்தத் தோல்வியினால் 14 ஆட்டங்களில் 12 புள்ளிகள் மட்டும் எடுத்த கேகேஆர் அணி, பிளேஆஃப் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து 3-வது அணியாக வெளியேறியுள்ளது. 

லக்னெள அணி, 14 ஆட்டங்களில் 18 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. அந்த அணி லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்கிற பெருமையை கே.எல். ராகுலும் டி காக்கும் பெற்றுள்ளார்கள். இதற்கு முன்பு 2019-ல் சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னரும் பேர்ஸ்டோவும் ஆர்சிபிக்கு எதிராக 185 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஐபிஎல் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களை எடுத்த முதல் ஜோடியும் ராகுல் - டி காக் தான். 

* ஐபிஎல் போட்டியில் 20 ஓவர்களும் முழுமையாக விளையாடிய முதல் ஜோடி என்கிற பெருமையும் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் இவர்கள் 4-வது ஜோடி. 

* ஐபிஎல் போட்டியில் எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் எடுத்ததில் இந்தக் கூட்டணிக்கு 3-வது இடம். இதற்கு முன்பு ஆர்சிபியின் கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி, 2016-ல் குஜராத்துக்கு எதிராக 2-வது விக்கெட்டுக்கு 229 ரன்களும் 2015-ல் மும்பைக்கு எதிராக 215* ரன்களும் எடுத்தார்கள். 

* டி20 கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள்

213* - பாலாஜி பாய் - புரூஸ் (ஜிப்ரால்டர் vs பல்கேரியா)
210* - ராகுல் - டி காக் 

* ஐபிஎல் போட்டியில் அதிக சதங்கள் கேகேஆர் அணிக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளன. நேற்று டி காக் எடுத்த சதம், கேகேஆர் அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட 10-வது சதம். மும்பை அணிக்கு எதிராக 9 சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

* ஐபிஎல் போட்டியில் டி காக் எடுத்த 140* ரன்கள், 3-வது தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன்பு கிறிஸ் கெயில், 2013-ல் புணேவுக்கு எதிராக 175* ரன்களும் 2008-ல் கேகேஆர் அணிக்கு எதிராக மெக்குல்லம் 158* ரன்களும் எடுத்தார்கள். 

* ஐபிஎல் போட்டியில் கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார்  டி காக். 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் கடைசி 5 ஓவர்களில் அவர் 71 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு, 2018-ல் சிஎஸ்கேவுக்கு எதிராக கேகேஆரின் ரஸ்ஸல், 68 ரன்கள் எடுத்தார். 

* ஐபிஎல் போட்டியில் 2019-க்குப் பிறகு ஒரு பேட்டர் (டி காக்), ஒரு இன்னிங்ஸில் 10 சிக்ஸர்கள் அடுத்துள்ளார். இதற்கு முன்பு பொலார்ட், பஞ்சாப் அணிக்கு எதிராக 31 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com