சதம் விளாசிய விராட் கோலி; ராஜஸ்தானுக்கு 184 ரன்கள் இலக்கு!
விராட் கோலியின் அசத்தலான சதத்தால் ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்த இணை பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. பெங்களூரு அணி 125 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. கேப்டன் டு பிளெஸ்ஸி 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் (1 ரன்), சௌரவ் சௌகான் (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதம் இதுவாகும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நண்ட்ரே பர்கர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.