
போட்டி முடிந்ததும் களத்தில் எதிரணி வீரர்களான ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் தோனி சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போட்டி முடிந்ததும் களத்தில் இருந்து வெளியேறும் வீரர்களுக்கு பெவிலியனில் இருக்கும் வீரர்கள் கைகொடுத்து வரவேற்பது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றவுடன் களத்தில் இருந்து பெவிலியன் வந்த ஆர்சிபி வீர்களுக்கு சிஎஸ்கே வீரர்கள் கைகொடுக்க காத்திருந்தினர். அப்போது அதில் முதல் ஆளாக நின்றுகொண்டிருந்த தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல், அங்கிருந்த அந்த அணியின் மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்களுக்கு கைகொடுத்துவிட்டு சென்றார். இந்த விடியோ இணையளதங்களில் வைரலாகி வருவதோடு தோனியில் இந்த செயலை பல்வேறு தரப்பினர் விமர்சித்தும் வருகின்றனர்.
பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 68-ஆவது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. வாழ்வா-சாவா என்ற நிலையில் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகுந்த முக்கியமானதாக அமைந்தது. சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவா்களுக்குள்ளே வென்றால் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.
டாஸ் வென்ற சென்னை பௌலிங்கை தோ்வு செய்ய பெங்களூரு அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 218/5 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் சென்னை தரப்பில் சா்துல் தாகுா் 2-61 விக்கெட்டுகளை சாய்த்தாா். 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவா்களில் 191/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. யஷ் தயாள் வீசிய 20ஆவது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. பௌலிங்கில் பெங்களூரு தரப்பில் யாஷ் தயால் 2-42 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் சென்னை அதிா்ச்சியுடன் வெளியேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.