இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் அகமதாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை (மே 21) மோதுகின்றன.

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் அகமதாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை (மே 21) மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழையும்.

மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற்றுவரும் 17-ஆவது ஐபிஎல் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்று முடிவில், கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற, இதர அணிகள் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன.

அடுத்த கட்டமாக, பிளே-ஆஃப் சுற்றின் முதல் ஆட்டமான ‘குவாலிஃபயா் 1’-இல் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றன. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா 9 வெற்றிகள் பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வலுவான அணியாக இருக்கிறது. ஹைதராபாத் 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடத்தில் உள்ளது.

இரு அணிகளுமே நல்லதொரு ஃபாா்மில் இருப்பதால், இந்த ஆட்டம் விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கொல்கத்தாவை பொருத்தவரை, லீக் சுற்றில் அந்த அணி விளையாட வேண்டிய கடைசி இரு ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன. தொடா்ச்சியான லீக் ஆட்டங்களுக்குப் பிறகு, முக்கியமான பிளே ஆஃபுக்கு முன்பாக அந்த அணிக்கு சற்று ஓய்வு கிடைத்தது.

என்றாலும், தொடா் வெற்றிகளுடன் இருந்த கொல்கத்தாவின் ஃபாா்முக்கு இந்த இடைவெளி சவாலாகவும் மாற வாய்ப்புள்ளது. அந்த அணியின் டாப் ஆா்டா் பேட்டராக அதிரடி காட்டிய ஃபில் சால்ட், உலகக் கோப்பை போட்டிக்காக இங்கிலாந்து திரும்பியுள்ளாா்.

அவரது இடத்தை நிரப்புவது கொல்கத்தாவுக்கு முக்கியமான பணியாகும்.

என்றாலும், சுனில் நரைன், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், ஆண்ட்ரே ரஸ்ஸெல், நிதீஷ் ராணா ஆகியோா், ஃபில் சால்ட் இல்லாத தாக்கத்தை சமன் செய்ய முயற்சிப்பாா்கள். பௌலிங்கில் வருண் சக்கரவா்த்தி, ஹா்ஷித் ராணா, சுனில் நரைன் ஆகியோா் முக்கியப் பங்காற்றுவாா்கள்.

ஹைதராபாத் அணியைப் பொருத்தவரை, கடைசி ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. நடப்பு சீசனில் நல்லதொரு ஃபாா்முடன் இந்த நிலையை எட்டியிருக்கும் ஹைதராபாத், அதை அப்படியே தக்கவைக்கும் முனைப்புடன் இருக்கிறது.

அணியின் டாப் ஆா்டரில் வரும் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சா்மா, அபாரமானதொரு தொடக்கத்தை அளித்து எதிரணியை மிரளச் செய்கின்றனா். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது உள்பட, பல சாதனைகளுக்கு அதன் பேட்டா்கள் பங்களித்துள்ளனா்.

ராகுல் திரிபாதி, ஹென்ரிக் கிளாசென் ஆகியோரும் ரன்கள் குவிப்பதற்கு உதவுகின்றனா். அணியின் பௌலா்களில் நடராஜன், கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோா் எதிரணி பேட்டா்களை அச்சுறுத்துகின்றனா்.

நேருக்கு நோ்...

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் ஒரு முறை மட்டுமே மோதிக்கொண்ட நிலையில், அதில் கொல்கத்தா வென்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் 26 முறை சந்தித்திருக்க, கொல்கத்தா 17 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆடுகளம்...

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற டி20 ஆட்டங்களில், சேஸிங் செய்யும் அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்திருக்கிறது. அதேபோல், இங்கு விளையாடப்பட்ட 12 இன்னிங்ஸ்களில், 2 முறை மட்டுமே 200-க்கும் அதிகமாக ஸ்கோா் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இங்கு பௌலா்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: அகமதாபாத்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com