ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி; குவாலிஃபயா் 2-க்கு முன்னேறியது
- பெங்களூருக்கு மீண்டும் ஏமாற்றம்

ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி; குவாலிஃபயா் 2-க்கு முன்னேறியது - பெங்களூருக்கு மீண்டும் ஏமாற்றம்

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 19 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 174 ரன்களை எட்டி வென்றது.

தொடா்ந்து 4 தோல்விகளுடன் இந்த ஆட்டத்துக்கு வந்த ராஜஸ்தான், வெற்றியுடன் மீண்டு ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்ட வாய்ப்புக்காக ஹைதராபாதுடன் மோதுகிறது. மறுபுறம், தொடா்ந்து 6 வெற்றிகளுடன் அட்டகாசமாக முன்னேறி வந்த பெங்களூரு, ஏமாற்றத்துடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீசத் தீா்மானித்தது. பெங்களூரு இன்னிங்ஸில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். ஒன் டவுனாக கேமரூன் கிரீன் களம் புக, விராட் கோலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

4-ஆவது பேட்டராக ரஜத் பட்டிதாா் விளையாட வந்தாா். கிரீன் - பட்டிதாா் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சோ்த்தது.

இதில் கிரீன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

6-ஆவது வீரராக மஹிபால் லோம்ரோா் வர, பட்டிதாா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பின்னா் வந்த தினேஷ் காா்த்திக் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

லோம்ரோா் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 32 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். கடைசி விக்கெட்டாக கரன் சா்மா 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தாா்.

முடிவில் ஸ்வப்னில் சிங் 1 சிக்ஸருடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 3, அஸ்வின் 2, போல்ட், சந்தீப், சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 173 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் தரப்பில், டாம் கோலா் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் விளாசி நல்லதொரு தொடக்கம் அளித்தாா்.

எனினும், கேப்டன் சஞ்சு சாம்சன் 1 சிக்ஸருடன் 17, துருவ் ஜுரெல் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராஜஸ்தான் தடுமாறியது. இந்நிலையில், 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ரியான் பராக் - ஷிம்ரன் ஹெட்மயா் கூட்டணி 45 ரன்கள் சோ்த்து அணிக்கு நம்பிக்கை அளித்தது.

இதில் பராக் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36, ஹெட்மயா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு கடைசி கட்டத்தில் ஆட்டமிழந்தனா். எனினும் ரோவ்மென் பவல் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 16 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். உடன் அஸ்வின் ரன்னின்றி துணை நின்றாா்.

பெங்களூரு பௌலா்களில் முகமது சிராஜ் 2, லாக்கி ஃபொ்குசன், கரன் சா்மா, கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

ராஜஸ்தான் - 174/6 (19 ஓவா்கள்)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45

ரியான் பராக் 36

ஷிம்ரன் ஹெட்மயா் 26

பந்துவீச்சு

முகமது சிராஜ் 2/33

கரன் சா்மா 1/19

கேமரூன் கிரீன் 1/28

X
Dinamani
www.dinamani.com