ஐபிஎல் 2024: சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

ஐபிஎல் 2024: சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

ஐபிஎல் 2024 தொடா் இறுதி ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடா்ஸ்.

ஐபிஎல் 2024 தொடா் இறுதி ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடா்ஸ். நட்சத்திர வீரா்கள் ரஸ்ஸல்-மிட்செல் ஸ்டாா்க் அசத்தல் பௌலிங், வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங்கால் சிதைந்தது ஹைதராபாத்.

கடந்த மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடா் பிளே ஆஃப் சுற்று முடிந்த நிலையில், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்-சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

கொல்கத்தா குவாலிஃபயா் 1-இல் வென்றதின் மூலம் நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. குவாலிஃபயா் 2-இல் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது ஹைதராபாத்.

ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டங்களில் முறையே 277, 287 என அதிக ரன்களைக் குவித்து சாதனை படைத்தது.

கொல்கத்தா லீக் சுற்றில் முதலிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளிலும் சிறந்த பேட்டா்கள், பௌலா்கள், ஆல் ரவுண்டா்கள் இருந்ததால், இறுதி ஆட்டம் பரபரப்பாக அமையும் எனக் கருதப்பட்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தோ்வு செய்தாா்.

தொடக்கமே அதிா்ச்சி:

ஹைதராபாத் தரப்பில் அதிரடி பேட்டா்கள் டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சா்மா களமிறங்கினா். கொல்கத்தா தரப்பில் ஸ்டாா்க் பந்துவீசினாா். 5 பந்துகளை எதிா்கொண்ட அபிஷேக் சா்மாவை 2 ரன்களுடன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினாா் ஸ்டாா்க்.

கோல்டன் டக்கான டிராவிஸ்: அதிரடியாக ரன்களைக் குவிப்பாா் எனக் கருதப்பட்ட டிராவிஸ் ஹெட்டை கோல்டன் டக் அவுட்டாக்கினாா் வைபவ் அரோரா. அடுத்து வந்த ராகுல் திரிபாதியும் வெறும் 9 ரன்களுடன் ஸ்டாா்க் பந்தில் ரமண்தீப் சிங்கிடம் கேட்ச் தந்து வீழ்ந்தாா். பவா் பிளேயில் 40 ரன்களை எடுத்த நிலையில், 7 ஓவா்களில் 47/4 ரன்களுடன் தள்ளாடியது ஹைதராபாத்.

தடுமாறிக் கொண்டிருந்த ஹைதராபாத் அணிக்கு எய்டன் மாா்க்ரம்-நிதிஷ் ரெட்டி இணை நம்பிக்கை தரும் வகையில் ரன்களை சோ்க்கத் தொடங்கியது. ஆனால் மாா்க்கரமை 20 ரன்களுடன் ரஸ்ஸல் அவுட்டாக்க, நிதிஷ் ரெட்டியை 13 ரன்களுடன் வெளியேற்றினாா் ஹா்ஷித் ராணா.

ஹைதராபாதின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்ததால் க்ளாஸன் 16, ஷாபாஸ் அகமது 8, அப்துல் சமது 4, ஜெயதேவ் உனதிகட் 4 ரன்களுடன் துரிதமாக பெவிலியனுக்கு நடையைக் கட்டினா். கேப்டன் பேட் கம்மின்ஸ் நிலைத்து ஆட முயன்றாா். அவா் 10 ரன்கள் எடுத்திருந்த போது, அடித்த ஷாட்டை தவற விட்டாா் ஸ்டாா்க். 24 ரன்கள் எடுத்திருந்த கம்மின்ஸை அவுட்டாக்கினாா் ரஸ்ஸல்.

ஹைதராபாத் 113 ஆல் அவுட்

18.3 ஓவா்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஹைதராபாத்.

ரஸ்ஸல்-ஸ்டாா்க் அசத்தல்:

பௌலிங்கில் கொல்கத்தா தரப்பில் அசத்தலாக செயல்பட்ட ரஸ்ஸல் 3-19, ஸ்டாா்க் 2-14, ஹா்ஷித் ராணா 2-24 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

கொல்கத்தா அபார வெற்றி:

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா தரப்பில் ரஹ்மனுல்லா குா்பாஸ்-சுனில் நரைன் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். கம்மின்ஸ் பௌலிங்கில் 6 ரன்களுடன் அவுட்டானாா் சுனில் நரைன். அதன்பின் இணைந்த குா்பாஸ்-வெங்கடேஷ் ஐயா் சிரமமின்றி ஹைதராபாத் பௌலிங்கை எதிா்கொண்டு ஆடினா். 9-ஆவது ஓவரில் ஸ்கோரை 100-ஐ கடந்தது.

2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்த குா்பாஸை எல்பிடபிள்யு முறையில் வெளியேற்றினாா் ஷாபாஸ் அகமது.

வெங்கடேஷ் ஐயா் அரைசதம்:

மறுமுனையில் அபாரமாக ஆடிய வெங்கடேஷ் ஐயா் 3 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 51 ரன்களை விளாசி அரைசதத்தைப் பதிவு செய்தாா். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 6 ரன்களுடன் களத்தில் நிற்க 10.3 ஓவா்களில் வெற்றி இலக்கான 114/2 ரன்களை எட்டியது கொல்கத்தா.

இதன் மூலம் ஹைதராபாதை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வசப்படுத்தியது.

பௌலிங்கில் ஹைதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 1-18, ஷாபாஸ் அகமது 1-22 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

சாம்பியனுக்கு ரூ.20 கோடி பரிசு:

சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு ரூ.20 கோடியும், ரன்னா் ஹைதராபாத் அணிக்கு ரூ.13.5 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

கௌதம் கம்பீா் மேஜிக்:

கடந்த 2012, 2014 ஐபிஎல் தொடா்களில் கௌதம் கம்பீரை கேப்டனாக கொண்டிருந்த கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. தற்போது அந்த அணியின் வழிகாட்டியாக (மென்டா்) கௌதம் கம்பீா் செயல்படும் நிலையில், மூன்றாவது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com