
திலக் வர்மாவை ஆட்டத்தின் கடைசியில் வெளியேற்றியது (ரிட்டையர்டு ஹர்ட்) சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நேற்றிரவு மும்பை, லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ 203/8 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ வெற்றி பெற்றது. மும்பை அணியில் திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவரை 18.5ஆவது பந்தில் போட்டியில் இருந்து காயமின்றி ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேற்றப்பட்டார்.
இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு இது குறித்து பாண்டியா கூறியதாவது:
திலக் வர்மாவை வெளியேற்றியது வெளிப்படையானது. எங்களுக்கு சில ஷாட்டுகள் தேவைப்பட்டது. கிரிக்கெட்டில் இதுமாதிரி சில நாள்கள் வரும். எவ்வளவு முயற்சித்தாலும் பேட்டில் பந்து படாது.
ஒட்டுமொத்தமாக இது பேட்டிங் குழுவின் தோல்வி. நாங்கள் அணியாக வெல்கிறோம், அணியாக தோற்கிறோம். யாரையும் குறிப்பிட விரும்பவில்லை. பேட்டிங் குழுவின் தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.
தோற்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் ஃபீல்டிங்கில் 10-15 ரன்களை கூடுதலாக வழங்கிவிட்டோம் என்றார்.
பலரும் பாண்டியாவின் முடிவினை விமர்சித்து வருகிறார்கள்.