
காயத்திலிருந்து மீண்டுவந்துள்ள ஜஸ்பிரீத் பும்ராவின் உடல்நிலை குறித்து சக மும்பை இந்தியன்ஸ் வீரர் தீபக் சஹார் பேசியுள்ளார்.
பிஜிடி தொடரிலிருந்து காயம் காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா விலகினார். அவர் இல்லாமலே இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
பும்ரா இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்விகளை சந்தித்து வருகிறது.
புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்திலிருக்கும் மும்பை இந்தியன்ஸ் இன்று வெற்றிபெறுமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் பும்ரா குறித்து சக மும்பை இந்தியன்ஸ் வீரர் தீபக் சஹார் கூறியதாவது:
பும்ராவுக்கு முதுகு பிரச்னை. எனக்கும் அதேதான். அதனால், அவர் என்ன மாதிரி கஷடங்களை அனுபவித்திருப்பாரென எனக்குத் தெரியும்.
இது குழு விளையாட்டாக இருந்தாலும் தனிப்பட்ட ஆட்டமுமாக கருதுகிறேன். உங்களது உடலை பாதுகாக்க வேண்டும். நீங்கள் காயப்பட்டால் அது உங்கள் அணியை பாதிக்கும்.
காயப்பட்டால் அணியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். ஒவ்வொரு வீரருக்கும் இந்த உணர்வு வெவ்வேறாக இருக்கும்.
பும்ராவுக்கு வலுவாக சிந்திக்கும் மூளை இருக்கிறது. 3 மாத காயத்துக்குப் பிறகும் அவர் வீசிய பந்துகளை பார்த்தீர்கள்தானே! எவ்வளவு கிளாசிக்காக வீசுகிறார். அவர் அணியில் இணைந்தது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.