
லக்னௌ: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாக, உலகெங்கிலுமுள்ள சென்னை அணியின் தீவிர ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
லக்னௌவில் நடைபெற்ற 30-ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீசிய சென்னை அணி வீரர்கள், லக்னௌவை ரன் திரட்ட முடியாமல் நன்றாக கட்டுப்படுத்தினர். சென்னை அணியில் நூர் அகமது 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி பவர்- ப்ளே ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் திரட்டி அசத்தியது. இந்தநிலையில், 6 பௌண்டரிகள் விளாசிய ஷேக் ரஷீத் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன்பின் சென்னையின் ரன் வேகம் கட்டுக்குள் வந்தது.
ஃபார்முக்கு திரும்புவார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி 9 ரன்களுக்கு(10 பந்துகளில்) நடையைக் கட்டினார்.) அடுத்து வந்த ஜடேஜா (7 ரன்கள்), தமிழக வீரர் விஜய் ஷங்கர்(9 ரன்கள்) ஆட்டமிழக்க தோனி களத்திற்கு வந்தார். அவருடன் துபே ஸ்ட்ரைக்கில் இருந்தார். அப்போது கடைசி 5 ஓவர்களில் சென்னை அணிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, ஷர்துல் தாக்கூர் வீசிய 19-ஆவது ஓவரின் முதல் பந்து பௌண்டரி, இரண்டாவது பந்து (நோ-பால்) அதில் ஆஃப் சைடில் சிக்ஸர் பறக்கவிட்டார் ஷிவம் துபே. அதே ஓவரில் ஒரு வைட் பந்தும் வீசப்பட, 19-ஆவது ஓவரில் சென்னை அணி 19 ரன்கள் திரட்டியது; டென்ஷனும் விட்டுப்போனது...
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 5 ரன்கள்தான் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் 19.3 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சிஎஸ்கே.