
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இன்றைய போட்டியில் வான்ஷ் பேடி களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை அணி, இந்தாண்டில் விளையாடியுள்ள 6 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 இல் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை அணியின் பேட்டிங் மிகவும் கவலை தரும் சூழலில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகியுள்ளார். மீண்டும் தோனியின் தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள் என ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டர்களுமே சொதப்பி வருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டை போன்று பேட்டிங் செய்து வருவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒலித்து வைத்திருக்கும் இரண்டு இளம் வீரர்களை களமிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
யார் அவர்கள்?
ஏலத்தில் எடுக்கப்பட்டு வாய்ப்பளிக்காமல் உட்கார வைத்துள்ள 22 வயது வான்ஷ் பேடியையும் 20 வயது ஷேக் ரஷீத்தையும் இன்றைய போட்டியில் களமிறக்க வேண்டும் என்று வலுவான கருத்துகள் எழுந்துள்ளன.
விக்கெட் கீப்பர் பேட்டரான வான்ஷ் பேடி, தில்லி பிரீமியர் லீக் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தை பெற்றவர். மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் திறன்கொண்ட வான்ஷ் பேடி, தில்லி பிரீமியர் லீக்கில் 9 போட்டிகளில் விளையாடி 185 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.
2023 முதல் சென்னை அணியில் இருக்கும் பேட்டர் ஷேக் ரஷீத்தை இன்னும் ஒரு போட்டியில்கூட களமிறக்காமல் இருக்கிறது சென்னை அணி. 2022 உலகக் கோப்பை வென்ற அணியின் முக்கிய வீரரான இவர், டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஆந்திரா பிரீமியர் லீக் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய போட்டியில் இளம் வீரர்களான இருவரையும் சென்னை அணி களமிறக்குமா அல்லது மீண்டும் திரிபாதி, ஹூடா தானா என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.