
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய வேலையை எளிதாக்கியதாக ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியான தோல்விகளுக்கு சிஎஸ்கே முற்றுப்புள்ளி வைத்தது.
இதையும் படிக்க: வயதான ஆட்டநாயகன்! தோனி படைத்த சாதனைகள்!
நேற்றையப் போட்டியில் சிஎஸ்கேவுக்காக அதிகபட்சமாக ஷிவம் துபே 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் எம்.எஸ்.தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஷிவம் துபே பேசியதென்ன?
லக்னௌவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய ஷிவம் துபே, எம்.எஸ்.தோனி அதிரடியாக விளையாடியது தனது வேலையை எளிமையாக்கியதாக கூறினார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் மேலும் பேசியதாவது: தொடர்ச்சியாக 5 போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி மிகவும் பெரியது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைவது சிஎஸ்கே கிடையாது. எங்களது பந்துவீச்சாளர்கள் மிகவும் நன்றாக பந்துவீசினார்கள். விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆட்டத்தின் சூழலை உணர்ந்து நிதானமாக விளையாடினேன்.
இதையும் படிக்க: தோனியின் புதியதொரு மைல்கல் சாதனை: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!
எனது திட்டம் மிகவும் எளிதானது. நான் அதிரடியாக விளையாட நினைக்கவில்லை. ஏனெனில், பந்துவீச்சாளர்கள் மிகவும் நன்றாக அவர்களது திட்டங்களை செயல்படுத்தினார்கள். ஆட்டத்தின் இறுதியில் எம்.எஸ்.தோனி அதிரடியாக விளையாடியது என்னுடைய வேலையை எளிதாக்கியது. இந்தப் போட்டியில் கிடைத்த நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் அதன் அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது