ஐபிஎல் 2019: ரஸ்ஸலை விடவும் அதிகச் சம்பளம் பெறும் ஐபிஎல் வீரர்கள்!

அவருடைய திறமைக்கும் பங்களிப்புக்கும்  ஏதாவது ஒரு விலை வைக்க முடியுமா? விலைமதிப்பில்லாத ஆட்டமல்லவா அவை!
ஐபிஎல் 2019: ரஸ்ஸலை விடவும் அதிகச் சம்பளம் பெறும் ஐபிஎல் வீரர்கள்!

நேற்று, ரஸ்ஸல் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தீர்கள் தானே! அவருடைய திறமைக்கும் பங்களிப்புக்கும்  ஏதாவது ஒரு விலை வைக்கமுடியுமா? விலைமதிப்பில்லாத ஆட்டமல்லவா அவை!

இந்தமுறை கொல்கத்தா அணியில் ரஸ்ஸலுக்கு அளிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ. 8.50 கோடி. ஆனால் இந்தத் தொகையை விடவும் அவருடைய பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. 

முதல் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா வென்றதற்குக் காரணம் ரஸ்ஸல்தான். 19 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். பஞ்சாப்புக்கு எதிராக 17 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். இதனால் 218 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி அந்த ஆட்டத்தை சற்று எளிதாக வென்றது. தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் அதகளம். 28 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். சூப்பர் ஓவரில் தோற்றது கொல்கத்தா. நேற்றைய ஆட்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். முதலில் ஆடிய பெங்களூரு 205/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 206/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகைத் தன் பக்கம் திருப்பியுள்ளார் ரஸ்ஸல்.

ரஸ்ஸல்: ஐபிஎல் 2019

vs சன்ரைசர்ஸ் - 49* (19) - 4 சிக்ஸர் 
vs பஞ்சாப் - 48 (17) - 5 சிக்ஸர் 
vs தில்லி - 62 (28) - 6 சிக்ஸர் 
vs பெங்களூர் - 48* (13) - 7 சிக்ஸர்

இதுபோல கொல்கத்தா இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் அதிகளவில் பங்களிப்பு செய்துள்ளார் ரஸ்ஸல். இவருக்கு இணையான இன்னொரு டி20 வீரர் இருக்கமுடியுமா என்கிற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளார்.

ஆனால் இந்த ஐபிஎல் போட்டியில் ரஸ்ஸலை விடவும் அதிகச் சம்பளம் பெறும் வீரர்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியல்:

விராட் கோலி - ரூ. 17 கோடி
ஏபி டி வில்லியர்ஸ் - ரூ. 11 கோடி
சுனில் நரைன் - ரூ. 12.50 கோடி
கிறிஸ் லின் - ரூ. 9.60 கோடி
கேஎல் ராகுல் - ரூ. 11 கோடி
தோனி - ரூ. 15 கோடி
சுரேஷ் ரெய்னா - ரூ. 11 கோடி
கிறிஸ் மாரிஸ் - ரூ. 11 கோடி
ரிஷப் பந்த் - ரூ. 15 கோடி
ஸ்டீவ் ஸ்மித் - ரூ. 12.50 கோடி
பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி
ரோஹித் சர்மா - ரூ. 15 கோடி
கிருனாள் பாண்டியா - ரூ. 8.80 கோடி
ஹார்திக் பாண்டியா - ரூ. 11 கோடி
டேவிட் வார்னர் - ரூ. 12.50 கோடி
புவனேஸ்வர் குமார் - ரூ. 8.50 கோடி
ரஷித் கான் - ரூ. 9 கோடி
மணீஷ் பாண்டே - ரூ. 11 கோடி

(ரஸ்ஸல் சம்பளத்துக்கு நெருக்கமாக ஐபிஎல் அறிமுகம் வருண் சக்கரவர்த்தி, உனாட்கட் ஆகியோர் தலா ரூ. 8.40 கோடிக்கும் சஞ்சு சாம்சன் ரூ. 8 கோடிக்கும் தேர்வாகியுள்ளார்கள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com