நோ பால் சர்ச்சையில் ஆடுகளத்துக்குள் எதற்காக நுழைந்தார் தோனி?: சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம்!

நோ பால் என ஒரு நடுவர் அறிவிப்பதும் அதை மற்றவர் மறுப்பதும் என இந்த முடிவை அவர்கள் அணுகிய விதத்தில்...
நோ பால் சர்ச்சையில் ஆடுகளத்துக்குள் எதற்காக நுழைந்தார் தோனி?: சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை. முதலில் ஆடிய ராஜஸ்தான் 151/7 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 155/6 ரன்களை எடுத்து வென்றது. கடைசிப் பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார் ஆல்ரவுண்டர் சாண்ட்னர். 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது சென்னை அணி. பாதி ஆட்டங்களை விளையாடியுள்ள நிலையில் ஏழு ஆட்டங்களில் ஆறில் வென்று 12 புள்ளிகள் பெற்றுள்ளதால் சென்னை அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இன்னும் 4 புள்ளிகள் எடுத்தால் போதும். இதனால் சென்னை அணி பிளேஆஃப்-புக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் பந்துவீசிய போது நோபால் வீசியதாக சர்ச்சை எழுந்தது. கடைசி ஓவரின் நான்காவது பந்தை கள நடுவர் நோ பால் என சைகையால் தெரிவித்தார். ஆனால் ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் அல்ல என மறுத்தார். இதனால் நோ பால் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. எனினும் இதைக் கண்டு ஆவேசமான சென்னை கேப்டன் தோனி மைதானத்தின் உள்ளே சென்று நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். நோ பால் என அறிவித்தபிறகும் அதைத் திரும்பப் பெற்றது ஏன் என வாக்குவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாதால் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இக்காட்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எந்தச் சூழலிலும் நிதானமாக இருக்கும் தோனி, இதுபோல தன்னிஷ்டத்துக்கு ஆடுகளத்துக்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததை கிரிக்கெட் நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் விமரிசனம் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக தோனிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தோனியின் இந்தச் செயல் குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறியதாவது:

எங்கள் புரிதல் என்னவென்றால், பந்துவீச்சு முனையில் இருந்த நடுவர் நோ பால் என அறிவித்தார். ஆனால், ஸ்கொயர் லெக் நடுவர் அதை மறுத்துவிட்டார். எனவே அது நோ பாலா இல்லையா எனக் குழப்பம் இருந்தது. தோனிக்குத் தெளிவான நிலை தேவைப்பட்டது. ஆனால் அது கிடைப்பது போலத் தெரியவில்லை. எனவே அவர் ஆடுகளத்துக்குள் நுழைந்து நடுவர்களுடன் விவாதிக்கப் புறப்பட்டார். நான் அப்படித்தான் பார்க்கிறேன். அதற்குப் பிறகு அவரிடம் இதுகுறித்துதான் விவாதித்தேன். 

தோனி உள்ளே சென்றதற்குக் காரணம் அவருக்கு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதில் உள்ள சரி, தவறு குறித்து தோனி உள்பட பிறகு எல்லோரும் பேசத்தான் போகிறார்கள். நோ பால் என ஒரு நடுவர் அறிவிப்பதும் அதை மற்றவர் மறுப்பதும் என இந்த முடிவை அவர்கள் அணுகிய விதத்தில் அவர் உஷ்ணமாகிவிட்டார் என நினைக்கிறேன். தெளிவான முடிவு தெரியவில்லை, அந்தக் கணத்தில் அதை அறிந்துகொள்ள அவர் எண்ணினார். அவருடைய செயல் இனி பல காலமாக நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com