இந்திய அணியில் மீண்டும் இடம்பெறவேண்டும்: நேற்றைய ஆட்டத்தில் ஆச்சர்யப்படுத்திய வருண் ஆரோன் விருப்பம்!

இந்த வருட ஐபிஎல்-லுக்கான ஏலத்தில் இவரை ரூ. 2.40 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி...
இந்திய அணியில் மீண்டும் இடம்பெறவேண்டும்: நேற்றைய ஆட்டத்தில் ஆச்சர்யப்படுத்திய வருண் ஆரோன் விருப்பம்!

தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில், முதலில் ஆடிய கொல்கத்தா 175/6 ரன்களை எடுத்த நிலையில், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 177/7 ரன்களைக் குவித்து வென்றது.

கடந்த 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று பிளேஆஃப் கனவில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் வருண் ஆரோன் விளையாடுவார் என்றே யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஆட்டத்தில் பங்கேற்றதோடு ஃபோரும் சிக்ஸரும் பறந்த ஓர் ஆட்டத்தில் அற்புதமாகப் பந்துவீசி ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார் வருண் ஆரோன். 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

29 வயது ஆரோன், 2011-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டெஸ்ட்  ஆட்டத்தில் அறிமுகமானார். அதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். ஜார்கண்டைச் சேர்ந்த ஆரோன், தலா 9 டெஸ்ட், ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடி, 2015-க்குப் பிறகு தேடும் நிலைமைக்குச் சென்றுவிட்டார். இந்திய அணியில் ஷமி, புவனேஸ்வர், பும்ரா ஆகியோரின் வருகைக்குப் பிறகு இவரால் நிலைக்கமுடியாமல் போனது. காயங்களாலும் அடிக்கடி அவதிப்பட்டதும் இந்த நிலைமைக்கு ஒரு காரணம். 

ஆனாலும் தொடர்ந்து தன் திறமையை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் ஈடுபட்டுள்ளார் ஆரோன். இங்கிலாந்துக்குச் சென்று லீசெஸ்டர்ஷையர் அணிக்காக கவுண்டி ஆட்டங்களில் பங்கேற்றார். 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை யாரும் தேர்வு செய்யாததால் மனம் வெறுத்து இங்கிலாந்துப் பக்கம் சென்றார். அங்கு ஓரளவு நன்றாக விளையாடி தன்னம்பிக்கை அடைந்தார். பல வித்தைகளைப் புதிதாகக் கற்றுக்கொண்டார். அடிப்படை விலை ரூ. 50 லட்சமாக இருந்த நிலையில் இந்த வருட ஐபிஎல்-லுக்கான ஏலத்தில் இவரை ரூ. 2.40 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. நேற்று அவர் பங்கேற்ற 2-வது ஆட்டத்திலேயே அணியின் வெற்றிக்குப் பெரிதளவில் பங்களித்துள்ளார். 

இதற்கு முன்பு அவுட்ஸ்விங் அதிகமாக வீசுவேன். ஆனால் கவுண்டி கிரிக்கெட்டில் இடம்பெற்ற பிறகு இன்ஸ்விங் குறித்து அதிகம் கற்றுக்கொண்டேன். கொல்கத்தா ஆடுகளம் போன்றவற்றுக்கு அது அதிகம் உதவுகிறது. இந்த ஆடுகளத்தில் அதிக பவுன்ஸ் உள்ளது. இந்த ஐபிஎல்-லில் எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்திக்கொள்ளவுள்ளேன். இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கூறியுள்ளார் வருண் ஆரோன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com