19 பந்துகளில் அரைசதம்: ராகுல் மிரட்டலில் பஞ்சாப் அதிரடி வெற்றி
By DIN | Published On : 05th May 2019 07:30 PM | Last Updated : 06th May 2019 10:18 AM | அ+அ அ- |

நன்றி: டிவிட்டர்/ஐபிஎல்
சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.
சென்னை பேட்டிங் விவரம்: http://bit.ly/2Jhx98z
171 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு கேஎல் ராகுல் மிரட்டலான தொடக்கத்தை தந்தார். ஹர்பஜன் சிங் வீசிய 2-வது ஓவரில் 2 சிக்ஸர் அடிக்க 18 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து ஹர்பஜன் வீசிய 4-வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் 24 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம், அவர் தனது 19-வது பந்தில் அரைசதத்தை அடித்தார்.
ராகுல் அதிரடி காட்ட கெயில் அடக்கி வாசித்தார். அரைசதம் அடித்த பிறகும் ராகுல் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் எளிதானது. இந்த நிலையில், ஹர்பஜன் சிங் மீண்டும் பந்துவீச வந்தார். ஆனால், இந்த முறை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுக்கு பதிலாக விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் மற்று கெயிலை அடுத்தடுத்து பந்தில் வீழ்த்தி அசத்தினார்.
ராகுல் 36 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 71 ரன்கள் எடுத்தார். கெயில் 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹர்பஜன் சிங் ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால், பஞ்சாப் அணி சற்று தடுமாறியது. எனினும், நிகோலஸ் பூரான் இமாலய சிக்ஸர்களாக அடித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு நம்பிக்கையளித்தார்.
அந்த அணி வெற்றிக்கு மிக அருகில் சென்ற நிலையில் பூரான் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு, மன்தீப் சிங் மற்றும் சாம் கரன் பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றபோதிலும் பஞ்சாப் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இல்லை. சென்னை அணி தோல்வியடைந்திருந்தாலும் பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபையர் போட்டியிலேயே விளையாடவுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...