இந்தச் சூழலில் ஒரு ரூபாய் கூட வேண்டாம்: ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு

இந்தச் சூழலில் ஒரு ரூபாய் கூட வேண்டாம்: ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு

நாங்கள் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை. மக்களைப் பாதுகாக்க எண்ணுகிறோம்.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதையடுத்து நிலைமையைக் கவனித்த பிறகு ஐபிஎல் போட்டி குறித்த முடிவுகளை எடுக்கலாம் என பிசிசிஐயும் ஐபிஎல் அணி உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவை பொருத்தவரை இதுவரை 84 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்குவதாக இருந்தது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை ஆகிய அணிகள் மோத இருந்தன. 

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.

இந்நிலையில் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிசிசிஐ அதிகாரிகள், ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள். ஐபிஎல் போட்டியின் நிலைமை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில், நிலைமையைக் கவனித்த பிறகு ஐபிஎல் போட்டி குறித்த முடிவுகளை எடுக்கலாம் என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களின் உடல்நலன் மீது தான் எங்களுக்கு அக்கறை உள்ளது. இச்சூழலில் நாங்கள் பணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. நிலைமை மாறாவிட்டால், ஐபிஎல் நடக்காமல் போனாலும் எனக்குக் கவலையில்லை. பிசிசிஐ, ஐபிஎல், ஸ்டார் நிறுவனம் என யாரும் ஐபிஎல் போட்டியை நடத்தி வருமானம் ஈட்ட எண்ணவில்லை. இச்சமயத்தில் ஒரு ரூபாய் வருமானத்தைக் கூட எண்ணுவது சரியல்ல என்றே எண்ணினோம். எனவே, எங்களுக்குப் பணம் முக்கியமல்ல. இந்தச் சூழலில் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை. அனைவருடைய உடல்நலன் தான் முக்கியம் எனக் கருதியுள்ளோம். 

அரசின் வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுவோம். யாருக்கும் ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும் எனத் தெரியாது. இரண்டு, மூன்று வாரங்கள் கழித்து நிலவும் சூழலை ஆராய்வோம். அப்போது கரோனா பாதிப்புகள் குறையும் என நம்புகிறோம். உடல்நலனும் பாதுகாப்பும் தான் இப்போது முக்கியமானது. லாப நஷ்டமல்ல. நாங்கள் லாபம் சம்பாதிக்க எண்ணவில்லை. மக்களைப் பாதுகாக்க எண்ணுகிறோம். 90 நிமிடக்கூட்டத்தில் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை மாற்றுவது குறித்து விவாதித்தோம் என யாரும் தவறாக எண்ணவேண்டாம். அதற்கான நேரமல்ல இது. அடுத்ததாக, எப்போது வெளிநாட்டு வீரர்கள் வருவார்கள் என்று கேட்பீர்கள். விசாவுக்கான தடை 15-ம் தேதி வரை உள்ளது. எனவே பார்க்கலாம். ஐபிஎல் நடந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com