6 ஓவர்களில் 65 ரன்கள்: தில்லிக்குப் பலனளித்த 'அதிரடி' மாற்றம்
By DIN | Published On : 08th November 2020 08:25 PM | Last Updated : 08th November 2020 08:25 PM | அ+அ அ- |

2-வது குவாலிபையர் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக மார்கஸ் ஸ்டாய்னிஸை களமிறக்கியது நல்ல பலனை அளித்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த ஆட்டத்திலிருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டார். எனவே, அவருக்குப் பதில் அஜின்க்யா ரஹானே தொடக்க வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்பு இருந்தது.
ஆனால், ஷிகர் தவானுடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
லீக் சுற்றின் 2வது பகுதியில் தில்லியின் தொடர் தோல்விகளுக்கு தொடக்கம் மிக முக்கியக் காரணமாக இருந்து வந்தது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் உள்பட கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில் தில்லிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. ஏதேனும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் ஒற்றை இலக்கு ரன்களிலேயே தொடர்ச்சியாக வெளியேறி ஆட்டமிழந்து வந்தனர். இதில் 5 முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளனர். கடைசியாக விளையாடிய முதல் குவாலிபையர் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். அவர்களுடன் 3-வது வீரராகக் களமிறங்கிய ரஹானேவும் டக் அவுட் ஆனார்.
இந்த தொடக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால், அணியின் பேட்டிங்கில் மாற்றம் ஏற்படலாம். இதைக் கருத்தில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் பிரித்வி ஷா நீக்கப்பட்டு, மார்கஸ் ஸ்டாய்னிஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார்.
இதற்குப் பலனளிக்கும் வகையில், இந்த ஆட்டத்தில் ஸ்டாய்னிஸ் மற்றும் தவான் அதிரடி காட்டினர். பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சாளரை மாற்றியும் ஹைதராபாத்துக்குப் பலனில்லை.
இந்த மாற்றமும், அதிரடி தொடக்கமும் பெரிய இலக்கை நிர்ணயிக்க தில்லிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...