படிக்கல், கோலி அரைசதம்: பெங்களூருவுக்கு 3-வது வெற்றி
By DIN | Published On : 03rd October 2020 07:30 PM | Last Updated : 03rd October 2020 07:34 PM | அ+அ அ- |

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் படிக்கல் மற்றும் கோலி அரைசதம் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
13-வது ஐபிஎல் சீசனின் 15-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் பேட்டிங்: தொடக்கம் சொதப்பல், பினிஷிங் அதிரடி: 154 ரன்களுக்குக் கட்டுப்பட்டது ராஜஸ்தான்
155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். படிக்கல் அதிரடியுடன் பேட்டிங்கைத் தொடங்க, 3-வது ஓவரிலேயே மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தினார் ஸ்மித். விளைவு 8 ரன்கள் மட்டுமே எடுத்த பின்ச் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, படிக்கல் ஓவருக்கு ஒரு பவுண்டரி என சேஸிங் செய்ய, கேப்டன் விராட் கோலி நிதானம் காட்டி விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடினார்.
இந்த வியூகம் நல்ல பலனை அளிக்க 34-வது பந்தில் அரைசதத்தை எட்டினார் படிக்கல்.
இது இந்த ஐபிஎல் சீசனில் இவரது 3-வது அரைசதமாகும்.
அதேசமயம், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
பந்துவீச்சாளர்களை மாற்றியும் ஸ்மித்துக்குப் பலனில்லை. பிற்பகல் தொடங்கிய ஆட்டம் என்பதால், படிக்கல் சற்று சோர்வடையத் தொடங்கினார். இதன்பிறகு, கோலி அதிரடிக்கு மாறி அவரும் அரைசதத்தை எட்டினார்.
எனினும், படிக்கல் ஆர்ச்சர் பந்தில் போல்டானார். அவர் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, பினிஷிங் பொறுப்பை கோலி ஏற்று விளையாடினார். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் குறைவு என்பதால், டி வில்லியர்ஸும் நெருக்கடி இல்லாமல் விளையாடினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற நிலையில், முதல் பந்திலேயே டி வில்லியர்ஸ் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
19.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். டி வில்லியர்ஸ் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.