மிரட்டும் மும்பை வேகங்கள்: 136 ரன்களுக்கு சுருண்ட ராஜஸ்தான் படுதோல்வி

​ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மிரட்டும் மும்பை வேகங்கள்: 136 ரன்களுக்கு சுருண்ட ராஜஸ்தான் படுதோல்வி


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 20-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.

197 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஆனால், மிகவும் மோசமான தொடக்கமே ராஜஸ்தானுக்கு அமைந்தது. இளம் ஜெய்ஸ்வால் 2-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுக்கு பூம்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

போல்ட் மீண்டும் அடுத்த ஓவரை வீச சாம்சன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததால், ஜோஸ் பட்லர் மற்றும் மஹிபால் லோம்ரார் நிதானம் காட்டினர்.

இதனால், பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து, சஹார் ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற லோம்ரார் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு முழுக்க முழுக்க பட்லர் ஆட்டம்தான். டாம் கரண் ஒத்துழைக்க பட்லர் அதிரடி காட்டி மிரட்டினார். இதன்மூலம், 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த பட்லர், அடுத்த 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து 34-வது பந்தில் அரைசதம் எட்டினார்.

ராஜஸ்தான் கடைசி நம்பிக்கையாக விளையாடி வந்த பட்லர், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் அதிகளவிலேயே இருந்ததால் பவுண்டரிகளும் சிக்ஸருமாக அடித்து வந்தார். இந்த நிலையில், 14-வது ஓவரை பேட்டின்சன் வீசினார். அந்த ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற பட்லர், பவுண்டரி எல்லையில் போலார்டின் கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஆர்ச்சர் தவிர்த்து ராஜஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

டாம் கரண் (15), ராகுல் தெவாதியா (5), ஷ்ரேயஸ் கோபால் (1), ஆர்ச்சர் (24), ராஜ்புத் (2) ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம், 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை.

மும்பை அணித் தரப்பில் பூம்ரா 4 விக்கெட்டுகளும், போல்ட் 2 விக்கெட்டுகளும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளும், சஹார் மற்றும் போலார்ட் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com