சூர்யகுமார் சூப்பர் பேட்டிங்: மும்பை 193 ரன்கள் குவிப்பு

​ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 20-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் மும்பைக்கு அதிரடி தொடக்கம் தந்தனர். ஓவருக்கு 10 ரன்கள் என்று விளையாடி வந்த நிலையில், அறிமுக இளம் வீரர் கார்த்திக் தியாகி ஓவரில் டி காக் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், பவர் பிளே முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். இதனிடையே தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முயன்ற ரோஹித் சர்மா, ஷ்ரேயஸ் கோபால் பந்தில் தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இதையடுத்து, மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இடது கை பேட்ஸ்மேனான க்ருணால் பாண்டியா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் சரியான டைமிங் கிடைக்காமல் திணறினார். எனினும் சூர்யகுமார் யாதவ் மறுமுனையில் ரன் ரேட்டை உயர்த்தி விளையாடினார்.

ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த க்ருணால் பாண்டியா 17 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களுக்கு ஆர்ச்சர் வேகத்தில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு, ஹார்திக் பாண்டியா களமிறங்கினார். சூர்யகுமார் யாதவும் 33-வது பந்தில் அரைசதம் அடிக்க, இருவரும் அதிரடியான பினிஷிங்குக்கு தயாராகினர். 

ஆர்ச்சர் வீசிய 17-வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்டாலும், 9 ரன்கள் மட்டுமே கிடைத்தன. தொடர்ந்து 18-வது ஓவரை டாம் கரண் வீச 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என 19 ரன்கள் கிடைத்தன.

19-வது ஓவரை மீண்டும் ஆர்ச்சர் வீச முதல் பந்தில் நோ பால் மூலம் பவுண்டரி கிடைத்தது. இதையடுத்து, சூர்யகுமார் சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தன.

கடைசி ஓவரை ராஜ்புத் வீசினார். அந்த ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி கிடைக்க 17 ரன்கள் கிடைத்தன. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 79 ரன்களுடனும், ஹார்திக் பாண்டியா 19 பந்துகளில் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் ஷ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டுகளையும், தியாகி மற்றும் ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com