சூழலை சரியாக மதிப்பீடு செய்த பேட்ஸ்மேன்கள்
By DIN | Published On : 15th October 2020 02:32 AM | Last Updated : 15th October 2020 02:32 AM | அ+அ அ- |

துபை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள், களத்தின் சூழலை சரியாக மதிப்பீடு செய்து விளையாடினர் என்று அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறினார்.
துபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே எடுத்து வீழ்ந்தது.
வெற்றிக்குப் பிறகு இதுகுறித்து தோனி கூறியதாவது: இந்த வெற்றியின் மூலம் கிடைத்த 2 புள்ளிகள் முக்கியமானவை. சில ஆட்டங்கள் திட்டமிட்டதற்கு எதிராகவும், சில ஆட்டங்கள் எதிர்பாராத பலனையும் தரும் என்பதை டி20 போட்டிகள் நிரூபிக்கின்றன. ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் உள்பட அனைத்திலுமே தகுந்த முறையில் செயல்பட்டோம்.
ஆட்டத்தின் சூழலை பேட்ஸ்மேன்கள் சரியாக மதிப்பீடு செய்து விளையாடினர். 160 என்ற இலக்கை நோக்கி எதிரணி விளையாடும்போது முதல் 6 ஓவர்கள் முக்கியமானதாகும். அந்த வகையில் எதிரணியை கட்டுப்படுத்த பெளலர்களும் தங்களது பணியை சிறப்பாகச் செய்தனர். சிறந்த ஆட்டமாக இல்லாவிட்டாலும், அதற்கு நெருக்கமான ஒரு ஆட்டத்தை விளையாடினோம்.
சாம் கரன் ஒரு முழுமையான வீரர். வேகப்பந்துவீசும் ஆல்-ரவுண்டர், சுழற்பந்துவீச்சை பேட்டிங்கில் திறம்பட எதிர்கொள்பவர், அணிக்குத் தேவையான 15- 45 ரன்களை தருபவர் என சிறப்பாகச் செயல்படுகிறார். அதனாலேயே அவரை தொடக்க வீரராக களமிறக்கினோம் என்று தோனி கூறினார்.