அரசுப் பணியில் பதவி உயர்வு: வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி எதிர்பார்ப்பு

பிற மாநிலங்களில் இருந்தும் மத்திய அரசில் இருந்தும் வேலை வாய்ப்புகள் வந்தன.
தமிழக முதல்வரை இன்று சந்தித்த பவானி தேவி. அருகில் அவருடைய தாயார்.
தமிழக முதல்வரை இன்று சந்தித்த பவானி தேவி. அருகில் அவருடைய தாயார்.

தமிழக அரசுப் பணியில் பதவி உயர்வை எதிர்பார்ப்பதாக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி கூறியுள்ளார்.

வாள்வீச்சு போட்டியில் மகளிா் தனிநபா் சப்ரே பிரிவில் இந்தியாவின் சி.ஏ.பவானி தேவி 2-ஆவது சுற்றில் போராடி தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு போட்டியாளா் என்ற பெருமையை பெற்றிருந்தாா் தமிழக வீராங்கனையான பவானி தேவி. முதல் சுற்றில் அவா் டுனீசியாவின் நாடியா பென் அஸிஸியை எதிா்கொண்டாா். இதில் 15-3 என அபாரமாக வென்றாா். அடுத்த சுற்றில் உலகின் 3-ஆம் நிலையில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மேனான் புருனெட்டை எதிா்கொண்டாா் பவானி. ரியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை முன்னேறிய மேனான் கடுமையான சவால் அளித்தாா். பவானி 7-15 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தாா்.

இந்நிலையில் சென்னை திரும்பியுள்ள பவானி தேவி, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பவானி தேவி கூறியதாவது:

போட்டிக்கு முன்பு இருதடவை எல்லாப் போட்டியாளர்களிடம் முதல்வர் பேசினார், அனைவரையும் வாழ்த்தினார். எல்லா உதவிகளும் வழங்கப்படும் என்கிற நம்பிக்கையை அவர் அளித்தார். வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பாக முதல்முறையாக நான் பங்கேற்றது இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருந்துள்ளது. 

ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்திய வாளை முதல்வருக்குப் பரிசாகக் கொடுக்க எண்ணி வழங்கினேன். ஆனால், அடுத்த ஒலிம்பிக்ஸிலும் நீங்கள் நன்றாக விளையாட வேண்டும், அதற்கு இந்த வாள் தேவைப்படும் என்று எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார். அடுத்த ஒலிம்பிக்ஸிலும் பங்குபெற தமிழக அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளார். 

மின்சார வாரியத்தில் நான் வேலை செய்வதால் அதைப் பற்றியும் முதல்வர் கேட்டறிந்தார். ஒலிம்பிக்கில் கலந்துகொள்பவர்களுக்கு எப்போதும் பதவி உயர்வு அளிக்கப்படும். அதுவும் முதல்முறையாகத் தகுதி பெறும்போது இன்னும் அதிகமாகக் கொடுப்பார்கள். எனவே நானும் பதவி உயர்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பிற மாநிலங்களில் இருந்தும் மத்திய அரசில் இருந்தும் வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால், நம் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும் என்கிற ஆசையில் இங்கே உள்ளேன். எனவே பதவி உயர்வுக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். நல்ல செய்தி வரும் என நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com