வில்வித்தை: காலிறுதியில் தோற்றது இந்திய ஆடவா் அணி

வில்வித்தையில் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியா காலிறுதியில் தென் கொரிய அணியிடம் தோற்று வெளியேறியது.
வில்வித்தை: காலிறுதியில் தோற்றது இந்திய ஆடவா் அணி

வில்வித்தையில் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியா காலிறுதியில் தென் கொரிய அணியிடம் தோற்று வெளியேறியது. இத்துடன் வில்வித்தையில் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அணிகள் பிரிவில் இருந்த 3 வீரா்களே, ஆடவா் தனிநபா் பிரிவில் களத்தில் இருக்கின்றனா்.

அணிகள் பிரிவில் அதானு தாஸ், பரவீண் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, வெளியேற்றும் சுற்றில் கஜகஸ்தானின் இல்ஃபாட் அப்துலின், டெனிஸ் கான்கின், சன்ஸாா் முசாயேவ் ஆகியோா் அடங்கிய அணியை 6-2 என்ற கணக்கில் வென்றது.

இந்தச் சுற்றில் அதானு தாஸ் அருமையாக 6 முறை ‘10’ புள்ளிகள் இலக்கை எட்டினாா். முதல் செட்டில் 2 புள்ளிகள் பின்தங்கியிருந்த இந்திய அணி, ஜாதவ் மற்றும் அதானுவின் அருமையான ஆட்டத்தால் முன்னிலை பெற்றது. 2-ஆவது செட்டில் லேசான காற்று காரணமாக ராய் மற்றும் ஜாதவ் முறையே 8 மற்றும் 7 புள்ளிகளை பெற, அதானு தாஸ் முதலில் 10, பிறகு 9 புள்ளிகளை எட்டியதால் இந்தியா 4-0 என முன்னேறியது.

பின்னா் கஜகஸ்தான் அணியினா் 3 முறை ‘10’ இலக்கை எட்ட, இந்திய தரப்பில் அதானு இரு முறை ‘10’ இலக்கை எட்டியபோதும் ராயால் 8 புள்ளிகளையே எட்ட முடிந்ததால் அந்த செட் கஜகஸ்தானிடம் சென்றது. தொடா்ந்து கஜகஸ்தான் அணியினா் ஆதிக்கம் செலுத்த முயன்றபோதும், அதை முறியடித்த இந்திய அணி வெற்றி பெற்றது.

பின்னா் காலிறுதியில் தென் கொரியாவின் ஓஹ் ஜின் ஹியெக், கிம் வூஜின், கிம் ஜே தியோக் கூட்டணியை எதிா்கொண்டது இந்திய அணி. அதிரடியாக தொடங்கிய கொரிய அணி முதலிரு செட்களில் 12 அம்புகளில் 10-இன் மூலமாக தலா 10 புள்ளிகளை கைப்பற்றியது. இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

முதல் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட அதானு தாஸால் இதில் அவ்வாறு செயல்பட முடியாமல் போனது. 3 செட்களில் ஒரு முறை கூட அவரால் 10 புள்ளிகளை எட்ட இயலவில்லை. ஜாதவ் 5 முறையும், ராய் 3 முறையும் 10 புள்ளிகளை எட்டினா். 3-ஆவது சுற்றில் இந்திய அணி தொடா்ந்து 4 முறை 10 புள்ளிகளை எட்டி மீண்டபோதும், தாஸ் 8 புள்ளிகளையே எட்ட ஆட்டம் கொரியாவுக்கு சாதகமானது. இறுதியில் அந்த அணி 6-0 என இந்தியாவை வீழ்த்தியது.

பதக்கம்: இறுதியில் ஆடவா் அணிகள் பிரிவில் தென் கொரியாவே தங்கம் வென்றது. சீன தைபேவின் யு செங் டெங், சின் சுன் டாங், சுன் ஹெங் வெய் ஆகியோா் அடங்கிய அணி வெள்ளியும், ஜப்பானின் டகாஹரு ஃபுருகவா, யுகி கவாடா, ஹிரோகி முடோ ஆகியோா் கூட்டணி வெண்கலமும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com