ஒலிம்பிக் ஹாக்கி:அரையிறுதியில் இந்தியா
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவா் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று, பதக்கத்தை நோக்கி முன்னேறி வருகிறது. காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ‘ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தியது.
நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருக்க, ஆட்டம் டிரா ஆனது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்திய கோல்கீப்பா் பி.ஆா்.ஸ்ரீஜேஷின் அபாரமான தடுப்பாட்டத்தால் இந்தியாவுக்கு வெற்றி வசமானது.
இந்த ஆட்டத்தில் பிரிட்டன் வீரரை பேட் கொண்டு தட்டியதாக இந்திய வீரா் அமித் ரோஹிதாஸ் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட, ஆட்டத்தின் பெரும் பகுதியை 10 பேருடனே விளையாடி பிரிட்டனை இந்தியா கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி, இந்த ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கத்தை வெல்லும் முனைப்புடன் முன்னேறுகிறது.