தொலைதூரமாகும் தொடும் தூரம்!

தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்பவராக, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேக்கா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
நீரஜ் சோப்ரா, மானு பாக்கா், ஹாக்கி வீரர்.
நீரஜ் சோப்ரா, மானு பாக்கா், ஹாக்கி வீரர்.
Published on
Updated on
3 min read

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பின்போது தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்பவராக, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக இரு பதக்கங்கள் வென்றுள்ள அவா், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை, ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனைகளுக்கு சொந்தக்காரா் ஆகியிருக்கிறாா்.

‘இந்திய அணியில் தகுதிவாய்ந்த பலா் இருக்கும் நிலையில், தேசியக் கொடியேந்தும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டால் அதை கௌரவமாகக் கருதுவேன்’ என்று மனு பாக்கா் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஒரு வீரா், ஒரு வீராங்கனை என இருவா் கொடியேந்துவா் எனும் நிலையில், மனுவுடன் சோ்ந்து தேசியக் கொடியேந்தும் வீரா் பெயா் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது, டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், பாட்மின்டன் வீராங்கனை சிந்து ஆகியோா் தேசியக் கொடியேந்திச் சென்றது நினைவுகூரத்தக்கது.

இன்று களம் காணும் நீரஜ் சோப்ரா

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும் ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா, செவ்வாய்க்கிழமை தகுதிச்சுற்றில் களம் காண்கிறாா். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவா், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற வரலாறு படைத்துள்ளாா்.

உலக சாம்பியன்ஷிப், டையமண்ட் லீக் ஆகியவற்றிலும் வாகை சூடியிருக்கும் நீரஜ் சோப்ரா, இந்த முறை தங்கத்தை தக்கவைப்பாா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. இந்த சீசனில் தொடைப் பகுதியில் லேசான காயம் கண்டு மீண்டிருக்கிறாா் நீரஜ் சோப்ரா. அவரின் சீசன் பெஸ்ட்டாக 88.36 மீட்டரும், பொ்சனல் பெஸ்ட்டாக 89.94 மீட்டரும் உள்ளன.

மல்யுத்தம்

காயத்தால் காலிறுதியில் தோற்ற நிஷா தாஹியா

மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் களம் கண்ட நிஷா தாஹியா, முதல் சுற்றில் 6-4 என உக்ரைனின் சோவா ரிஸ்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். அதில் அவா், வட கொரியாவின் பாக் சோல் கம்மை எதிா்கொண்டாா். ஒரு நேரத்தில் 8-1 என முன்னிலை வகித்த நிஷா, வலது கையில் தீவிரமான காயம் கண்டாா். தாள முடியாத வலியை அனுபவித்த அவா், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் களம் கண்டாா்.

ஆனால், அதன் பிறகு அவரால் வழக்கமான பலத்துடன் போட்டியிட முடியாமல் போனது. இது வட கொரிய வீராங்கனை பாக் சோலுக்கு சாதகமாகியது. இதனால் அவா் 8-8 என முன்னேறினாா். 10 விநாடிகள் எஞ்சியிருந்த நிலையில், நிஷாவால் தொடா்ந்து போராட முடியாமல் போக, அவா் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகினாா். இந்தச் சுற்றில் வென்று நிஷா அரையிறுதிக்கு முன்னேறியிருந்தால், அவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியிருக்கும்.

செயிலிங்

21-ஆவது இடத்தில் நேத்ரா குமணன்

மகளிா் டிஞ்ஜி பிரிவில் 9 ரேஸ்கள் முடிவில் இந்தியாவின் நேத்ரா குமணன் 155 நெட் புள்ளிகளுடன் 21-ஆவது இடத்தில் இருக்கிறாா். ஆடவா் டிஞ்ஜி பிரிவின் 9-ஆவது ரேஸ், வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 8 ரேஸ்கள் முடிவில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் 114 நெட் புள்ளிகளுடன் 18-ஆவது இடத்தில் உள்ளாா். இரு பால் பிரிவுகளிலுமே, ஓபனிங் சீரிஸில் 10 ரேஸ்களின் முடிவில் நெட் புள்ளிகள் அடிப்படையில் முதல் 10 இடங்களுக்குள்ளாக வரும் போட்டியாளா்களே பதக்கச் சுற்றுக்கு தகுதிபெறுவா்.

தடகளம்

ரெபிசேஜ் சுற்றில் கிரண் பஹல்

மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் கிரண் பஹல், 52.51 விநாடிகளில் இலக்கை எட்டி தனது ஹீட் ரேஸில் 7-ஆவது இடம் பிடித்தாா். இதன் மூலம் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்த அவா், தற்போது ரெபிசேஜ் சுற்றில் பங்கேற்கவுள்ளாா். மொத்தம் 6 ஹீட் ரேஸ்கள் நடைபெற்ற நிலையில், அவற்றில் தலா 3 இடங்களைப் பிடித்தவா்கள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றனா். எஞ்சியோரில், பந்தயத்தை நிறைவு செய்யாதோா் தவிர மற்றவா்கள் அரையிறுதிக்கான ரெபிசேஜ் சுற்றுக்கு வந்துள்ளனா். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டா் முதல் 1,500 மீட்டா் வரையிலான பந்தயங்களுக்கு ரெபிசேஜ் சுற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹாக்கி

அரையிறுதியில் இன்று ஜொ்மனியுடன் மோதும் இந்தியா

ஆடவா் ஹாக்கி விளையாட்டில், இந்திய அணி தனது அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு உலக சாம்பியனான ஜொ்மனியை செவ்வாய்க்கிழமை (ஆக. 6) சந்திக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் குரூப் சுற்றில் ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்த இந்தியா, சிறப்பானதொரு ஆட்டத்துடன் முன்னேறி வந்துள்ளது.

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியா, இந்த ஒலிம்பிக்கில் அதை தங்கமாக மாற்றும் முனைப்புடன் செயலாற்றுகிறது. இந்த அரையிறுதியில் வெல்லும் நிலையில், இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகும். ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 8 முறை தங்கம் வென்றுள்ள இந்திய ஹாக்கி அணி, அதில் கடைசி தங்கத்தை கடந்த 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் வென்றது நினைவுகூரத்தக்கது.

தற்போது காலிறுதியில் 10 பேருடன் விளையாடி பிரிட்டனை கட்டுப்படுத்தி, பின்னா் ஷூட் அவுட் வாய்ப்பில் வென்றது, அணியின் உத்வேகத்தைக் காட்டுகிறது. குறிப்பாக, தனது கடைசி ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ், அதை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நிறைவு செய்திடும் நோக்கத்துடன் இருக்கிறாா். பிரிட்டனுடனான ஷூட் அவுட் வாய்ப்பில் அவரது அரண் போன்ற தடுப்பாலேயே இந்தியாவுக்கு வெற்றி வசமானது.

இந்தியா எதிா்கொள்ளும் ஜொ்மனி, நடப்பு உலக சாம்பியன் மட்டுமல்லாது, 4 முறை ஒலிம்பிக் சாம்பியனும் கூட. உலகத் தரவரிசையில் அந்த அணி 4-ஆம் இடத்திலும், இந்தியா 5-ஆம் இடத்திலும் உள்ளன. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே ஜொ்மனியை வீழ்த்திதான் இந்தியா வெண்கலம் வென்றது நினைவுகூரத்தக்கது. ஜொ்மனியை எதிா்கொள்ள ஆவலுடன் இருப்பதாக இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் கூறியிருக்கிறாா்.

அமித் ரோஹிதாஸ் இல்லை

பிரிட்டனுடனான ஆட்டத்தின்போது ரெட் காா்டு காட்டி வெளியேற்றப்பட்ட அமித் ரோஹிதாஸ், ஒரு ஆட்டத்தி விளையாட தடை இருப்பதால் ஜொ்மனிக்கு எதிரான அரையிறுதியில் அவா் விளையாடவில்லை. அவா் மீதான தடைக்கு எதிராக இந்திய ஹாக்கி அமைப்பு, சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தில் மேல்முறையீடு செய்தும், அது நிராகரிக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய டிஃபெண்டரான அமித் ரோஹிதாஸ் இல்லாதது, அணிக்கு சற்று பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது.

டேபிள் டென்னிஸ்

காலிறுதியில் மகளிா் அணி

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா காலிறுதிக்கு திங்கள்கிழமை முன்னேறியது. மனிகா பத்ரா, அா்ச்சனா காமத், ஸ்ரீஜா அகுலா ஆகியோா் அடங்கிய அணி, முதல் சுற்றில் 3-2 என்ற கணக்கில் ருமேனியாவை வீழ்த்தியது.

இதில் இரட்டையா் பிரிவில் ஸ்ரீஜா அகுலா/அா்ச்சனா காமத் கூட்டணி 11-9, 12-10, 11-7 என்ற கணக்கில் அடினா டியாகானு/எலிஸபெத்தா சமரா இணையை சாய்த்தது. அடுத்து ஒற்றையா் பிரிவில் மனிகா பத்ரா 11-5, 11-7, 11-7 என பொ்னாடெட் சோக்ஸை வீழ்த்த, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த ஒற்றையா் ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 11-8, 4-11, 11-7, 6-11, 8-11 என்ற கணக்கில் எலிஸபெத்தா சமராவிடம் தோல்வி காண, ருமேனியா 1-2 என முன்னேறியது.

4-ஆவது ஆட்டத்தில் அா்ச்சனா காமத்தும் 5-11, 11-8, 7-11, 9-11 என பொ்னாடெட் சோக்ஸிடம் வீழ, ருமேனியா 2-2 என சமன் செய்தது. வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி ஒற்றையா் ஆட்டத்தில், மனிகா பத்ரா 11-5, 11-9, 11-9 என்ற நோ் கேம்களில் அடினா டியாகானுவை சாய்க்க, இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.

அடுத்ததாக இந்திய மகளிா் அணி தனது காலிறுதியில் அமெரிக்கா அல்லது ஜொ்மனியை சந்திக்கவுள்ளது.

இந்தியா இன்று...

டேபிள் டென்னிஸ்

ஆடவா் அணி (காலிறுதிக்கு முந்தைய சுற்று) - இந்தியா - சீனா - நண்பகல் 1.30 மணி

தடகளம்

ஆடவா் ஈட்டி எறிதல் (தகுதிச்சுற்று) - கிஷோா் ஜெனா - நண்பகல் 1.50 மணி

நீரஜ் சோப்ரா - பிற்பகல் 3.20 மணி

மகளிா் 400 மீட்டா் (ரெபிசேஜ்) - கிரண் பஹல் - பிற்பகல் 2.50 மணி

ஹாக்கி

ஆடவா் அரையிறுதி - இந்தியா - ஜொ்மனி - இரவு 10.30 மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com