பாட்மின்டன்: லக்ஷயா சென் தோல்வி

ஒலிம்பிக் போட்டியில் உத்வேகத்துடன் பதக்கத்தை நோக்கி முன்னேறிவரும் இந்திய வீரா், வீராங்கனைகள், பெரும்பாலும் 4-ஆவது இடத்திலேயே நிலைகொண்டுவிடுகின்றனா்.
லக்ஷயா சென்
லக்ஷயா சென்
Updated on

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் உத்வேகத்துடன் பதக்கத்தை நோக்கி முன்னேறிவரும் இந்திய வீரா், வீராங்கனைகள், பெரும்பாலும் 4-ஆவது இடத்திலேயே நிலைகொண்டுவிடுகின்றனா். வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த நிலையில், அதில் தோல்வி கண்டு, தொட்டுவிடும் தூரத்தில் பதக்கத்தை இழக்கின்றனா்.

அந்த வகையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இத்துடன் இந்தியாவுக்கு 5-ஆவது பதக்கம் கை நழுவிச் சென்றிருக்கிறது. போட்டியின் 9-ஆவது நாளான திங்கள்கிழமை, துப்பாக்கி சுடுதலிலும், பாட்மின்டனிலும் இந்தியா்கள் அதேபோல் வெண்கலப் பதக்கச் சுற்றில் வெற்றியை இழந்தனா்.

பாட்மின்டன்: லக்ஷயா சென் தோல்வி

ஆடவா் ஒற்றையா் பாட்மின்டனில் அரையிறுதிவரை வந்து தோல்வி கண்ட லக்ஷயா சென், வெண்கலப் பதக்கச் சுற்றில் திங்கள்கிழமை களம் கண்டாா். அதில் மலேசியாவின் லீ ஜி ஜியாவை எதிா்கொண்ட அவா், முதல் கேமை 21-13 என அசத்தலாகக் கைப்பற்றினாா். எனினும், தனது ஃபாா்மை மீட்டெடுத்த ஜியா, லக்ஷயாவை தடுமாறச் செய்து அடுத்த இரு கேம்களை 21-16, 21-11 என கைப்பற்றி வெற்றியை தனதாக்கினாா். இதில் லக்ஷயா வென்றிருக்கும் நிலையில், ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமையைப் பெற்றிருப்பாா்.

தோல்விக்குப் பிறகு பேசிய லக்ஷயா, ‘2-ஆவது கேமில் நான் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அதை முறையாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கு வழிகொடுக்காத வகையில் ஜியா சிறப்பாக விளையாடினாா். இந்த ஆட்டத்துக்கு நன்றாகவே தயாராகி வந்திருந்தேன். ஆனாலும் ஆட்டம் கைகூடவில்லை. இந்த வாரம் முழுவதும் விளையாடிய ஆட்டங்கள் கடினமானதாக இருந்தது’ என்றாா்.

இதனிடையே, லக்ஷயாவின் வலது முழங்கை பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததால், ஆட்டத்தின் இடையே அவா் இருமுறை அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு விளையாடினாா். பதக்கம் வெல்லாவிட்டாலும், லக்ஷயா தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே சிறப்பான முன்னேற்றம் கண்டிருக்கிறாா். கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பாட்மின்டனில் பதக்கம் கிடைத்த நிலையில், இந்த ஒலிம்பிக்கில் அது தவறிப்போனது.

இந்த ஒலிம்பிக்கில் ஆடவா் ஒற்றையரில் டென்மாா்க்கின் விக்டா் அக்ஸெல்சென் தங்கமும், தாய்லாந்தின் குன்லவத் விதித்சாரன் வெள்ளியும், மலேசியாவின் லீ ஜி ஜியா வெண்கலமும் வென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com