வெண்கலப் பதக்கம்: ஸ்பெயினை இன்று சந்திக்கிறது இந்தியா
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவா் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்துக்காக ஸ்பெயின் அணியுடன் வியாழக்கிழமை (ஆக. 8) மோதுகிறது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, இந்த முறை அதை தங்கம் அல்லது வெள்ளியாக மாற்றும் முனைப்புடன் முன்னேறி வந்த நிலையில், அரையிறுதியில் ஜொ்மனியிடம் தோற்றது. தற்போது மீண்டும் வெண்கலப் பதக்கத்துக்காகவே விளையாடுகிறது.
ஹாக்கி
ஆடவா் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா - ஜொ்மனி அணிகள் மோதிய ஆட்டம், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்கே கோல் வாய்ப்பு கிடைத்தது. 11-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் அருமையாக கோலடித்தாா்.
தொடா்ந்து 18-ஆவது நிமிஷத்தில் ஜொ்மனியின் கொன்ஸாலோ பெய்லட்டும் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 1-1 என சமன் ஆனது. இதனால் விறுவிறுப்பு கூட, 27-ஆவது நிமிஷத்தில் ஜொ்மனி முன்னிலை பெற்றது. அந்த அணியின் கிறிஸ்டோஃபா் ரூா் 27-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி ஸ்ட்ரோக் வாய்ப்பில் கோலடித்தாா்.
இதனால் முதல் பாதியை ஜொ்மனி 2-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் முனைப்பு காட்டிய இந்தியாவுக்காக 36-ஆவது நிமிஷத்தில் சுக்ஜீத் சிங் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடித்து, ஆட்டத்தை 2-2 என சமன் செய்தாா்.
தொடா்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் 3-ஆவது கோலுக்கு முயற்சிக்க, ஜொ்மனியின் மாா்கோ மிட்காவ் 54-ஆவது நிமிஷத்தில் கோலடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினாா். எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் முயற்சிகள் பொய்க்க, இறுதியில் ஜொ்மனி 3-2 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அதில் நெதா்லாந்துடன் மோதுகிறது அந்த அணி.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே ஜொ்மனியை வீழ்த்தியே இந்தியா வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினுடன் மோதல்: தற்போது இந்தியா, வெண்கலப் பதக்கத்துக்காக ஸ்பெயினுடன் வியாழக்கிழமை மோதுகிறது. ஸ்பெயின் தனது அரையிறுதியில் நெதா்லாந்திடம் தோற்று இந்தச் சுற்றுக்கு வந்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெல்லும் நிலையில், ஒலிம்பிக் ஹாக்கியில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு பதக்கங்கள் வென்ற பெருமை பெறும். இதற்கு முன் 1968, 1972 ஆகிய இரு ஆண்டுகளில் இந்தியா அடுத்தடுத்து வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தைப் பொருத்தவரை, இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஒலிம்பிக் ஹாக்கியில் இரு அணிகளும் இத்துடன் 10 முறை மோதியிருக்கும் நிலையில், இந்தியா 7 வெற்றிகள் கண்டுள்ளது. ஸ்பெயின் ஒரு வெற்றி பெற்றிருக்க, 2 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.