வினெஷ் போகத்
வினெஷ் போகத்

எப்போதோ யாருக்கோ சொன்னது இப்போது வைரலாகிறது!

நியூ ஸிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவரின் எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது.
Published on

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நியூ ஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் எக்ஸ் பதிவு தற்போது வைரலாகியிருக்கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது நியூ ஸிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில், ஜிம்மி நீஷம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மேற்கொண்டிருந்தததுதான் அந்தப் பதிவு.

அதில் அப்படி என்ன சொல்லியிருந்தாரோ, அது இப்போது படிக்கும்போது, இந்திய ரசிகர்களுக்கு சொல்லப்படுவதுபோலவே உள்ளது.

அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், குழந்தைகளே, விளையாட்டில் ஈடுபட வேண்டாம், கேக் செய்வது அல்லது வேறு எந்த வேலையையும் எடுத்துக்கொள்ளுங்கள். நன்கு உடல் கொழுத்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து 60 வயதில் இறந்துவிடலாம் என்று பதிவிட்டிருந்தார்.

2019ஆம் ஆண்டு அவர் பதிவிட்டிருந்ததை, சமூக வலைதளங்களில் மக்கள் தற்போது தேடிப்பிடித்து வைரலாக்கி வருகிறார்கள்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான மல்யுத்தத்தில், 100 கிராம் உடல் எடை கூடுதலாக இருந்ததற்காக, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, இந்தியர்களின் இதயங்களில் பேரடி தாக்கிய நிலையில்தான் இது வைரலாகியிருக்கிறது.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் களம்கண்ட வினேஷ் போகத், செவ்வாய் இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்துள்ளார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மல்யுத்தப் போட்டியின் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கியூபாவின் கஸ்மன் லோபஸ் யுஸ்னெலிஸை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்று, சாதனை படைத்திருந்தார்.

50 கிலோ எடைப்பிரிவில் விளையாட வேண்டிய வினேஷ் போகத், செவ்வாய்க்கிழமை இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விளையாட வேண்டிய நாள்களில், அவர் 50 கிலோவுக்கு கூடுதல் எடையுடன் இருக்கக் கூடாது என்பது விளையாட்டு விதிமுறை.

எனவே, செவ்வாய்க்கிழமை இரவு முதல் வினேஷ் போகத், தொடர் ஓட்டம், ஸ்கிப்பிங், சைக்கிளிங் என அனைத்துக் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

தொடர் பயிற்சியால் ஒரே இரவில் 1.85 கிலோ எடையைக் குறைத்த அவரால் 100 கிராமை குறைக்க முடியாமல் போயிருக்கிறது. அவரால் குறைக்க முடியாமல் போன அந்த 100 கிராம் உடல் எடையானது, அவரை இன்று ஒலிம்பிக் பதக்கம் எனும் கனவை நனவாக்க விடாமல் தடுத்து, தகுதி நீக்கம் செய்யக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்திய ஒலிம்பிக் குழு சார்பில், வினேஷ் போகத் தனது உடல் எடையைக் குறைக்க சற்று நேரம் கேட்டும், அது பாரீஸ் ஒலிம்பிக் அமைப்பினால் மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com