
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இது தலைமுறைகளுக்கு போற்றப்படும் சாதனை. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து, வெண்கலப் பதக்கத்தை நாட்டிற்கு வென்றிருக்கிறது. ஒலிம்பிக்கில் அவர்கள் பெற்ற இரண்டாவது பதக்கம் என்பது சிறப்பானதாகும். அவர்களின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி, குழு உணர்வின் வெற்றி. அவர்கள் மகத்தான துணிச்சலையும் நெகிழ்ச்சியையும் காட்டினார்கள். அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் ஹாக்கியுடன் உணர்ச்சி ரீதியிலான தொடர்பைக் கொண்டுள்ளனர். மேலும் இந்த சாதனை நமது நாட்டின் இளைஞர்களிடையே இந்த விளையாட்டை மேலும் பிரபலமாக்கும்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “என்ன ஒரு அற்புதமான திறமை. வெண்கலப் பதக்கம் வென்ற நமது ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். உங்களின் ஆற்றல் நிரம்பிய செயல்திறன் விளையாட்டுக்கான புதிய ஆர்வத்தைத் தூண்டும். உங்கள் சாதனை இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.