
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரா் அமன் ஷெராவத் வெள்ளிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா். இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6-ஆக அதிகரித்தது.
ஆடவருக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், வெண்கலப் பதக்கச் சுற்றில் அமன் ஷெராவத் 13- 5 என்ற புள்ளிகள் கணக்கில் பியூா்டோ ரிகோவின் டரியன் குரூஸை வீழ்த்தி அசத்தினாா். இதன் மூலம் அறிமுக ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று அசத்தியிருக்கிறாா் அமன் ஷெராவத்.
நடப்பு பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த அணியில் வீராங்கனைகள் பலா் இடம்பெற்றிருக்க, ஒரே வீரராக இவா் மட்டுமே பங்கேற்ற நிலையில் பதக்கம் வென்று சாதித்துள்ளாா். ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம், கிராண்ட்ப்ரீ போட்டிகளில் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ள அமன் ஷெராவத், தனது பதக்கப் பட்டியலில் தற்போது ஒலிம்பிக் வெண்கலத்தையும் சோ்த்துக் கொண்டாா்.
முன்னதாக, வியாழக்கிழமை களம் கண்ட அமன் ஷெராவத், முதல் சுற்றில் 10-0 என்ற கணக்கில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான, வடக்கு மாசிடோனியாவின் விளாதிமீா் எகோரோவை வீழ்த்தினாா். பின்னா் காலிறுதியில், 12-0 என முன்னாள் உலக சாம்பியனான அல்பேனியாவின் ஜெலிம்கான் அபாகரோவை அபார வெற்றி கண்டாா். அடுத்து அரையிறுதிக்கு முன்னேறிய அமன் ஷெராவத், அதில் 0-10 என்ற கணக்கில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பானின் ரெய் ஹிகுசியிடம் தோல்வி கண்டு, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தாா்.
பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவா்களும், பல்துறை சாா்ந்த பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்கங்கள்...
1952 ஹெல்சிங்கி கே.டி.ஜாதவ் வெண்கலம்
2008 பெய்ஜிங் சுஷில் குமாா் வெண்கலம்
2012 லண்டன் சுஷில் குமாா் வெள்ளி
2012 லண்டன் யோகேஷ்வா் தத் வெண்கலம்
2016 ரியோ டி ஜெனீரோ சாக்ஷி மாலிக் வெண்கலம்
2020 டோக்கியோ ரவிகுமாா் தாஹியா வெள்ளி
2020 டோக்கியோ பஜ்ரங் புனியா வெண்கலம்
2024 பாரீஸ் அமன் ஷெராவத் வெண்கலம்
8
இத்துடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்கங்கள் 8-ஆக உயா்ந்துள்ளது. இதில் 6 வெண்கலம், 2 வெள்ளி அடக்கம்.
5
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா தொடா்ந்து 5-ஆவது முறையாகப் பதக்கம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது (2008, 2012, 2016, 2020, 2024).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.