
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி உறுதி என அனைவரும் ஆர்வமாக இருந்தபோது, 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதால் வினேஷ் போகத் இறுதிச்சுற்றிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது அனைவருக்கும் பேரதிர்ச்சியை அளித்தது.
50 கிலோ மல்யுத்த பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் மட்டுமே வழங்கப்படும் எனவும், வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது எனவும் ஒலிம்பிக் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்ததையடுத்து வினேஷ் போகத் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. வினேஷ் போகத் தரப்பிலும், சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி முறையிடப்பட்டது.
இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்து விளையாட்டுகளுக்கும் விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகள் காலத்துக்கு ஏற்றவாறு திருத்தம் செய்யப்பட வேண்டும். வினேஷ் போகத் நேர்மையாக போட்டியில் பங்கேற்று இறுதிச்சுற்றுத் தகுதி பெற்றார். இறுதிப்போட்டிக்குப் முன்னதாக வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது மட்டுமின்றி வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என ஒலிம்பிக் சங்கம் தரப்பில் கூறியிருப்பது சரியான முடிவா என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதக்கம் வழங்கப்படவில்லையென்றால், அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், வினேஷ் போகத் நேர்மையான முறையில் போட்டியிட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளார். அவர் கண்டிப்பாக வெள்ளிப் பதக்கத்துக்கு தகுதியானவரே. வினேஷ் போகத்தின் முறையீடு சர்வதேச விளையாட்டு நடுவர் மன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறது. வினேஷ் போகத்துக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் அனைவரும் காத்திருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.