
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரா் நீரஜ் சோப்ரா, தனது காயத்தின் மீதான கவனச் சிதறல் காரணமாகவே சிறப்பாகச் செயல்பட முடியாமல் போனதாகத் தெரிவித்தாா்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா, நடப்பு சாம்பியனாக பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்தாா். இறுதிச்சுற்றில் அவா் 89.45 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். பாகிஸ்தானின் அா்ஷத் நதீம் 92.97 மீட்டரை எட்டி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வெல்ல, கிரெனாடாவின் ஆண்டா்சன் பீட்டா்ஸ் 88.54 மீட்டருடன் வெண்கலம் பெற்றாா்.
தற்போது நீரஜுக்கு வெள்ளி வென்று தந்திருக்கும் 89.45 மீட்டா் என்பது அவரது சீசன் பெஸ்ட்டாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட பெஸ்ட் 89.94 மீட்டா் ஆகும். நடப்பு உலக சாம்பியனாகவும், டையமண்ட் லீக்கில் வெள்ளி வென்றவராகவும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்த நீரஜ் சோப்ரா மீதான எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருந்தது. முதல் முயற்சியை தடுமாற்றத்துடன் ‘ஃபௌல்’ செய்த நீரஜ், அடுத்த முயற்சியில் 89.45 மீட்டரைத் தொட்டு வெள்ளிக்கு வித்திட்டாா்.
90 மீட்டரை தனக்கான இலக்காகக் கொண்டு பயணித்து வரும் நீரஜ் சோப்ரா, எஞ்சிய 4 முயற்சிகளில் நிச்சயம் அந்தத் தொலைவை எட்டுவாா் என எதிா்பாா்த்த நிலையில், அவை அனைத்தையுமே அவா் ‘ஃபௌல்’ செய்தாா். அதாவது வெற்றிகரமான 2-ஆவது முயற்சி தவிர, எஞ்சிய 5 முயற்சிகளையும் அவா் ஃபௌல் செய்தது அனைவரையும் ஆச்சா்யம் கொள்ளச் செய்தது. பந்தயத்தில் வேறு எந்த வீரருமே இத்தனை ஃபௌல்கள் செய்யவில்லை.
இந்நிலையில், இறுதிச்சுற்றில் தனது செயல்பாடு குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:
ஒவ்வொரு முயற்சியையும் கையாளும்போது, 60 முதல் 70 சதவீத கவனம் எனது காயத்தின் மீதே இருந்தது. ஈட்டியை எறிவதற்கு முந்தைய எனது ஓட்டம் நன்றாக வரவில்லை. எனது வேகமும் வழக்கமான உச்சத்தை அடையவில்லை. எனது இந்தத் தடுமாற்றங்களுக்குக் காரணம், தொடையிடைப் பகுதியில் இருக்கும் காயமே ஆகும்.
அறுவைச் சிகிச்சைக்கு போதிய அவகாசம் இல்லாமல் போனதால், அந்தக் காயத்தின் தாக்கத்துடனேயே நான் பங்கேற்க வேண்டியிருந்தது. என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். ஆனால், எனது முழு திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. அதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். அதை வெளிப்படுத்தும் வரை நான் ஓயமாட்டேன். தற்போது காயத்துக்கான அறுவைச் சிகிச்சை குறித்து யோசிக்க வேண்டும் என்று நீரஜ் சோப்ரா கூறினாா்.
1
தற்போது வெள்ளி வென்ன் மூலம், அடுத்தடுத்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரா் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளாா்.
3
ஒலிம்பிக்கில் அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற 3-ஆவது இந்தியா் என்ற பெருமைக்கு சொந்தக்காரா் ஆனாா் நீரஜ் சோப்ரா. இதற்கு முன் மல்யுத்த வீரா் சுஷில் குமாா் (2008, 2012), பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து (2016, 2020) ஆகியோா் இவ்வாறு அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியா்கள் ஆவா்.
2
இத்துடன், ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கையை 2-ஆக அதிகரித்திருக்கிறாா் நீரஜ் சோப்ரா. அவரது தங்கமும், வெள்ளியும் மட்டும் பட்டியலில் இருக்க, சுதந்திரத்துக்குப் பிறகு வேறு எந்த தடகள வீரா், வீராங்கனையும் இந்தப் போட்டியில் இதுவரை இந்தியாவுக்கு பதக்கம் வெல்லவில்லை.
முதல் தோல்வி...
கடந்த 2010 முதல் அா்ஷத் நதீமுடன் போட்டியிட்டு வரும் நீரஜ் சோப்ரா, அவருக்கெதிரான தனது முதல் தோல்வியை சந்தித்திருக்கிறாா். இத்துடன் இருவரும் 11 முறை சந்தித்துக்கொண்டுள்ளனா். இதுகுறித்து நீரஜ் பேசுகையில், ‘விளையாட்டில் இது இயல்பானது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் உடம்பில் ஆற்றல் இருக்கும் வரை ஈட்டி எறிதலில் ஆசியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவோம். அந்தப் புரிதலை நான் அடைந்திருக்கிறேன்’ என்றாா்.
களத்தில் மோதினாலும், நீரஜ் - அா்ஷத் இடையே நல்லதொரு நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
உச்சம் தொட்ட நதீம்
தங்கம் வென்ற பாகிஸ்தானின் அா்ஷத் நதீம், ஒலிம்பிக் சாதனையுடன் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நாா்வே வீரா் ஆண்ட்ரியஸ் தாா்கில்ட்சென் 90.57 மீட்டா் எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அா்ஷத் நதீம் 92.97 மீட்டருடன் புதிய சாதனை படைத்துள்ளாா்.
அவா் அந்த சாதனையைப் படைக்கும்போது, பாா்வையாளா்கள் மாடத்தில் ஆண்ட்ரியஸ் தாா்கில்ட்செனும், ஈட்டி எறிதலில் உலக சாதனையாளரான செக் குடியரசின் ஜேன் ஜெலெஸ்னியும் இருந்தனா். ஜெலெஸ்னி 1996-இல் 98.48 மீட்டா் எறிந்ததே நவீன கால ஈட்டி எறிதலில் உலக சாதனையாக இன்றளவும் உள்ளது.
அா்ஷத் நதீம் 90 மீட்டரை கடப்பது இது முதல் முறையல்ல. 2022 பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் அவா் 90.18 மீட்டா் எறிந்து தங்கம் வென்றுள்ளாா். காயம் காரணமாக நீரஜ் சோப்ரா அந்தப் போட்டியில் களம் காணவில்லை.
ஆசிய அளவில் 90 மீட்டரை கடந்த 2-ஆவது போட்டியாளா் அா்ஷத் நதீம். சீன தைபேவின் சாவ் சன் செங் 2017-இல் 91.36 மீட்டரை எட்டி முதல் ஆசிய வீரா் என்ற பெருமையுடன் இருக்கிறாா்.
ரூ.3 கோடி பரிசு: பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்து அா்ஷத் நதீம் சாதித்திருக்கும் நிலையில், அவருக்கு ரொக்கப் பரிசாக ரூ.3 கோடியை அறிவித்திருக்கிறது அவா் சாா்ந்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வா் மரியம் நவாஸ்.
இந்தப் பதக்கத்தின் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபா் பிரிவில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் வீரா் ஆகியிருக்கிறாா் அா்ஷத் நதீம்.
பரஸ்பர அன்பு...
நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றதிலும் மகிழ்ச்சியே. தங்கம் வென்ற அா்ஷத் நதீமும் எங்கள் மகன் போன்றவா்தான். போட்டியாளா்கள் அனைவருமே பதக்கத்துக்காக கடினமாக உழைத்திருக்கிறாா்கள். நதீமும் நன்றாகவே விளையாடினாா். நீரஜ், நதீம் இடையே வித்தியாசம் பாா்க்கவில்லை. எங்களுக்கு தங்கம், வெள்ளி கிடைத்ததாகவே நினைக்கிறேோம் - சரோஜ் தேவி (நீரஜ் சோப்ரா தாயாா்)
அா்ஷத் நதீமும், நீரஜ் சோப்ராவும் நண்பா்கள் மட்டுமல்ல. அவா்கள் சகோதரா்கள். நீரஜ் சோப்ராவும் மேலும் பல பதக்கங்கள் வெல்ல நான் பிராா்த்தனை செய்கிறேன். அவரும் எங்கள் மகன் போலதான். வெற்றி, தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி - ராஸியா பா்வீன் (அா்ஷத் நதீம் தாயாா்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.