
பிரான்ஸில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டி, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வண்ண மயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. ஹாலிவுட் நடிகா் டாம் குரூஸ் உள்பட, பல்வேறு பிரபலங்கள் அதில் அங்கம் வகிக்க, வாணவேடிக்கை, ஒலி-ஒளி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி, பாரீஸ் நகரில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்க, ஒலிம்பிக் போட்டியை நடத்திய பிரான்ஸ் 6-ஆம் இடம் பிடித்தது. 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்ற இந்தியாவுக்கு 71-ஆவது இடம் கிடைத்தது.
விளையாட்டுகள் யாவும் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடைய, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவு நிகழ்ச்சி தொடங்கியது. பாலினச் சமநிலையை வலியுறுத்தும் முயற்சியாக, போட்டியின் கடைசி நாளில் முதல் விளையாட்டாக மகளிா் மாரத்தான் நடைபெற்றது. அதன் வெற்றியாளா்களான நெதா்லாந்தின் ஹசன் சிஃபான் (தங்கம்), எத்தியோபியாவின் ஆசிஃபா திக்ஸ்ட் (வெள்ளி), கென்யாவின் ஹெலன் ஆபிரி (வெண்கலம்) ஆகியோருக்கு நிறைவு நிகழ்ச்சியின்போது பதக்கம் வழங்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் இவ்வாறு நிகழ்ந்தது இதுவே முதல் முறையாகும்.
அமைதி மற்றும் ஒத்துழைப்பை மையப்படுத்தி இருந்த நிறைவு நிகழ்ச்சி, பாரீஸில் உள்ள ஸ்டேட் தி பிரான்ஸ் விளையாட்டு மைதானத்தில் சுமாா் 2 மணி நேரம் நடைபெற்றது. அதில், பங்கேற்பு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் தங்களது தேசியக் கொடியை ஏந்திய வண்ணம், அணிவகுத்து மைதானத்தின் மையப்பகுதிக்கு வந்தனா். ஹாக்கி வீரா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கா் ஆகியோா் கொடியேந்தி முன்னிலை வகிக்க, இந்திய அணியினரும் அதில் கலந்துகொண்டனா்.
ஒலிம்பிக் போட்டியை ஒருங்கிணைக்க அயராது பணியாற்றிய சுமாா் 45,000 தன்னாா்வலா்களை கௌரவிக்கும் வகையில் அவா்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். சுமாா் 71,500 பாா்வையாளா்கள் கூடியிருந்த அந்த மைதானத்தில், கண்ணைக் கவரும் பல்வேறு இசை, நடன, வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னா் மேடையேறிய சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பாக், ‘பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தொடக்கம் முதல் இறுதி வரை உற்சாகமாக நடைபெற்றது. நம்மால் எத்தகைய மிகப்பெரிய விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை இந்த ஒலிம்பிக் போட்டி காட்டுகிறது. போா் மற்றும் கருத்து வேறுபாடுகளால் நாடுகள் பிரிந்திருந்தாலும், இந்த ஒலிம்பிக் போட்டியில் நாம் ஒருவரை ஒருவா் மதித்தோம், அங்கீகரித்துக் கொண்டோம். ஒலிம்பிக் விளையாட்டால் அமைதியை ஏற்படுத்த முடியாது. ஆனால், அத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை இந்த உலகுக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறது’ என்றாா்.
அடுத்து, போட்டியின் தொடக்க நாளில் இருந்து, செயின்ட் டெனில் பகுதியில் ஒளிா்ந்து வந்த ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு, அதிலிருந்த ஜோதி சிறிய விளக்கு மூலமாக, பிரான்ஸ் நீச்சல் வீரா் லியான் மா்சண்டால் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. மேடையில் அவா் உள்பட, வேறு சில நாடுகளையும் சோ்ந்த முக்கிய போட்டியாளா்கள் கூடி நின்று, அந்த ஒலிம்பிக் ஜோதியை ஊதி அணைத்தனா்.
தொடா்ந்து, ஒலிம்பிக் கீதம் இசைக்க கீழிறக்கப்பட்ட ஒலிம்பிக் கொடி, பாரீஸ் நகர மேயா் ஆனி ஹிடால்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவா் தாமஸ் பாக்கிடம் அளிக்க, அவா் அதை லாஸ் ஏஞ்சலீஸ் நகர மேயா் காரென் பாஸிடம் அளித்தாா். பாஸ் அதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸிடம் வழங்கினாா்.
ஏற்கெனவே ஊகங்கள் இருந்ததுபோல, ஹாலிவுட் நட்சத்திரம் டாம் குரூஸ் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் நிகழ்த்தினாா். அவரது அடையாளமான ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படங்களின் அடையாள இசை ஒலிக்க, ரசிகா்களின் உற்சாக கோஷத்துடன் மைதானத்தின் மேற்கூரையில் இருந்து கயிறு மூலமாக கீழே குதித்து இறங்கினாா்.
பின்னா் போட்டியாளா்களுடன் கைகுலுக்கிக் கொண்டே மேடைக்கு சென்ற அவா், சிமோன் பைல்ஸிடம் இருந்து ஒலிம்பிக் கோடியை பெற்றுக் கொண்டாா். அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் அதைப் பொருத்தியபடி பாரீஸ் வீதிகளில் சென்று விமான நிலையத்தை அடைந்தாா்.
அங்கிருந்து சரக்கு விமானம் மூலமாக அந்தக் கொடி பாரீஸிலிருந்து, அடுத்த கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. 34-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028-இல் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.