
அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான இமென் கெலிஃப், பாரீஸ் ஒலிம்பிக்கில் 66 கிலோ எடைப் பிரிவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட இத்தாலியின் ஏஞ்சலா காரினியை 46 விநாடிகளுக்குள் தோற்கடித்தார். இங்கேதான் தொடங்கியது இந்த சீசனின் பாலின அடையாளம் தொடர்பான சர்ச்சை! இந்தச் சர்ச்சைகள் அனைத்துக்கும் தங்கப் பதக்கம் வென்று பதிலளிப்பேன் என இமென் கெலிஃப் வேதனையுடன் கூறியிருந்தார். தங்கப் பதக்கம் வென்று சொன்னதைச் செய்தும் காட்டியுள்ளார்.
1960-களில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் ஒருவரின் பாலினத்தை உறுதிப்படுத்த அவர்களின் ஆடைகளைக் களைந்து பரிசோதிக்கும் அவலமான நிலையே இருந்தது. போட்டியில் கலந்துகொள்ளும் ஒருவர் பெண்தான் என்பதை உறுதிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் மேலும் கடினமானதாக இருந்தது.
நவீன கால ஒலிம்பிக் போட்டிகளில் பாலின அடையாளம் கண்டறியும் முறை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கேஸ்டர் செமன்யா அவரது 18-வது வயதிலேயே தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
அவர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். அதன் பின் கடந்த 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று அசத்தினார். ஆனால், அவர் இந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவில்லை. டெஸ்டோஸ்டெரான் (Testosterone) அளவு அதிகமாக இருப்பதால், அவர் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பாலின அடையாள விதிமுறைகள் தொடர்பாக சட்டப் போராட்டத்தை நடத்திவந்துள்ளார்.
விளையாட்டுப் போட்டிகளில் பெண்ணா, ஆணா என பாலினம் எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது? அதனை எவ்வாறு உறுதி செய்கிறார்கள்? அதற்கான விதிமுறைகள்தான் என்ன?
பெண்கள் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதி என்ன?
ஒலிம்பிக் போட்டிகளில் பெண் ஒருவர் போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் எக்ஸ்ஒய் (XY) குரோமோசோம்களை பெற்றிருக்கக் கூடாது. எக்ஸ்ஒய் (XY) குரோமோசோம்கள் ஆண்களில் காணப்படுபவை. பெண் ஒருவரின் டெஸ்டோஸ்டெரான் அளவு எக்ஸ்ஒய் (XY) குரோமோசோம்கள் எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.
பிறப்பின் மூலம் ஒருவர் பெண்ணாக அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் பெண்ணாகவே வளர்கிறார். ஆனால், ஒருகட்டத்தில் அவர் மாறுபட்ட பாலின வளர்ச்சியை (Differences of Sex Development அல்லது DSD) அடைகிறார். இந்த சூழலில் அவரது டெஸ்டோஸ்டெரான் அளவு இயல்பைக் காட்டிலும் அதிகமாகி அவர்களுக்கு எக்ஸ்ஒய் (XY) குரோமோசோம்கள் என்ற மாறுதலைக் கொடுக்கிறது. இதன் மூலம் மற்ற பெண்களைக் காட்டிலும் டெஸ்டோஸ்டெரான் அளவு அதிகமுள்ள இவர்கள் சராசரி பெண்களைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்டோஸ்டெரான் அளவு அதிகமுள்ள இவர்கள் மற்ற பெண்களுடன் போட்டியில் கலந்துகொள்ளும்போது, இவர்களுக்கே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற தகவல்கள் அறிவியல்பூர்வமாக இன்னும் விவாதப் பொருளாகவே உள்ளது.
பாலின அடையாளம் தொடர்பான தனது சட்டப் போராட்டத்தில் செமன்யாவால் அவருக்கு மாறுபட்ட பாலின வளர்ச்சி இருப்பது போன்ற தரவுகளை மறைக்க முடியவில்லை. இருப்பினும், அவர் பிறப்பின் மூலம் பெண்ணாகவும், அவரது ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும் பெண்ணாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டெஸ்டோஸ்டெரான் என்பது உடலில் இயற்கையாக உள்ள ஹார்மோன். வயது மூப்படைந்த பிறகு ஒருவருக்கு இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கத் தொடங்குகிறது. இதன் மூலம், அவர்களது தசை மற்றும் எலும்புகள் ஆகியவை நன்கு வலிமை பெறுகின்றன. பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டெரான் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். ஆண்களில் ஒரு லிட்டர் ரத்தத்தில 30 நானோ மோல் டெஸ்டோஸ்டெரான் சுரந்தால், பெண்களில் அந்த அளவு லிட்டருக்கு 2 நானோ மோல் என்ற அளவிலேயே சுரக்கும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, மாறுபட்ட பாலின வளர்ச்சியுடன் உள்ளவர்கள் மருத்துவ ரீதியாக ஆண்களாக அடையாளம் காணப்படுவர் என்றது. சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பு மனதை மிகவும் காயப்படுத்துவதாக செமன்யா தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் பாலின அடையாளம் என்பது சமுதாயம் மற்றும் விளையாட்டு உலகில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்தது. பாலின அடையாளம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது செமன்யா, டெஸ்டோஸ்டெரான் அளவைக் கட்டுப்படுத்த கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வாய்வழி மருந்துகள் எடுத்துக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாக அவருக்கு உடல் எடை அதிகரித்தல், காய்ச்சல், குமட்டல், அடிவயிறு வலி போன்ற தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பக்க விளைவுகள் அனைத்தையும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போதும், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போதும் சந்திக்க நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது விதிமுறைகள் என்ற பெயரில் டெஸ்டோஸ்டெரான் அளவு அதிகமாக இருப்பதை காரணம் காட்டி அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களை, ஆண்கள் அல்லது மாற்று பாலினத்தவர்கள் என்று குற்றச்சாட்டப்படுவதாகவும் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் பாலின சரிபார்ப்பு வேறுபடுவது ஏன்?
கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மாறுபட்ட பாலின வளர்ச்சி உடைய பெண்கள் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான விதிமுறைகள் உலக தடகளப் போட்டிகளில் கடுமையாக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பெண்களின் டெஸ்டோஸ்டெரான் அளவு லிட்டருக்கு 2.5 நானோ மோலுக்கும் குறைவாக 6 மாதங்களுக்கு இருக்க வேண்டும் என விதிமுறை கடுமையாக்கப்பட்டது. இதனால், போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பெண்ணின் டெஸ்டோஸ்டெரான் அளவு அதிகமாக இருந்தால், அவர் அதனைக் குறைக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
தடகளப் போட்டிகள் மட்டுமல்லாது நீர் சார்ந்த விளையாட்டுகள், சைக்கிளிங், கால்பந்து போட்டிகளிலும் டெஸ்டோஸ்டெரான் அளவு போட்டிகளுக்கு ஏற்றவாறு எந்த அளவில் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக் குழு இந்த விவகாரத்தில் அதிகம் அக்கறை காட்டுவது ஏன்?
போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சரியான மற்றும் நியாயமான போட்டிக் களத்தை ஏற்படுத்தித் தருவதில் விளையாட்டுக் குழு கவனம் செலுத்துகிறது. மேலும், உடல் வலிமை சம்பந்தப்பட்ட விளையாட்டுகளான குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம்.
செமன்யா வழக்கில் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தின் 3 பேர் அடங்கிய நடுவர் மன்றம் 2-1 என அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினர். போட்டி நியாயமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, சில நேரங்களில் பாகுபாடு பார்க்க வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டனர்.
இருப்பினும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரான் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக எந்த ஒரு விதிமுறையும் இல்லை. அதேபோல டெஸ்டோஸ்டெரான் அளவு சீராக இருக்கும் பெண்கள் இந்த தீர்ப்பினால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்த பாலின அடையாள விவகாரம் பூதாகரமானதையடுத்து, ஒலிம்பிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், டெஸ்டோஸ்டெரான் அளவு அதிகம் உள்ள பெண்கள் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளவர்கள் என்பது உண்மை கிடையாது என்றார்.
ஸ்வீடனை மையமாக வைத்து இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு அதற்கென தனி விதிமுறைகளை வகுத்துள்ளது. இருப்பினும், ஒலிம்பிக்கில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் ஃபிபா மற்றும் உலக தடகள அமைப்பு போன்ற சில சுதந்திரமான அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுவதை உறுதிசெய்ய அவர்கள் சில விதிமுறைகளைக் கொண்டுள்ளனர்.
பாலினம் தகுதி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சர்வதேச ஒலிம்பிக் குழு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிட்டது. போட்டி நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யவும், பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. ஆனால், பாரீஸ் ஒலிம்பிக்கின் குத்துச்சண்டை போட்டியில் சர்ச்சை உருவானது.
பாலின அடையாளம் தொடர்பான சோதனையில் ஒலிம்பிக் சங்கத்துக்கும், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தை ஒலிம்பிக் சங்கம் நிரந்தரமாக தடை செய்தது. கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது, சர்வதேச குத்துச்சண்டை சங்கம் பாலின அடையாள சோதனையில் இமென் கெலிஃப் தோல்வியடைந்ததாக அறிவித்தது. ஆனால், எதன் அடிப்படையில் பாலின அடையாள சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக அப்போது தெரிவிக்கப்படவில்லை. டெஸ்டோஸ்டெரான் அளவின் அடிப்படையில் இமென் கெலிஃப் தோல்வியடைந்தாரா என்ற கேள்விக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தரப்பில் சரியான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
பாலின அடையாள சோதனைக்கு எதிராக நின்றவர்கள் யார்?
கேஸ்டன் செமன்யாவுக்கு முன்பாக இந்தியாவின் ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த் பாலின அடையாள சோதனை விவகாரத்தில் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தை நாடியுள்ளார். அவர் டெஸ்டோஸ்டெரான் அளவு தொடர்பான விதிமுறைக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டில் குரல் கொடுத்துள்ளார்.
சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் கடந்த 2015 ஆம் ஆண்டு புதிய விதிமுறைகளை நிறுத்தி வைத்தது. அதன்பின், 2018 ஆம் ஆண்டு இந்த விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த முறை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தை செமன்யா நாடினார். அவர் மருந்துகள் மூலம் டெஸ்டோஸ்டெரான் அளவை குறைக்க மறுத்தார். 2019 ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் செமன்யாவுக்கு எதிராக தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, செமன்யா ஸ்விட்சர்லாந்து உச்சநீதிமன்றத்தையும், ஐரோப்பாவின் மனித உரிமைகள் கழகத்தின் நீதிமன்றத்தையும் நாடினார். அதில் குறிப்பிட்ட அளவு வெற்றியும் கண்டார். ஆனால், முழுமையான வெற்றி என்று கூறிவிட முடியாது. கடந்த மே மாதத்தில் செமன்யாவின் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த ஆண்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனைகள் இமென் கெலிஃப், லின் யு டிங் ஆகியோருக்கு எதிராகவும் இவர்கள் பெண்தன்மை கொண்டவர்கள் அல்லர், பெண்கள் அல்லர் என்ற சர்ச்சை எழுந்தது. எனினும், இவர்கள் பற்றிய முடிவில் ஒலிம்பிக் கமிட்டி உறுதியாக இருந்ததால் இருவருமே இறுதிப் போட்டியிலும் மோதி தங்கப் பதக்கங்களை வென்றிருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.