துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் ரமிதா, அா்ஜுன்
துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் ரமிதா, அா்ஜுன்

துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்றில் ரமிதா, அா்ஜுன்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் ரமிதா ஜிண்டால், அா்ஜுன் பபுதா ஆகியோா் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.
Published on

பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் ரமிதா ஜிண்டால், அா்ஜுன் பபுதா ஆகியோா் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.

10 மீட்டா் ஏா் பிஸ்டல் மகளிா் பிரிவில் மானு பாக்கா் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த நிலையில், 10 மீட்டா் ஏா் ரைஃபிள் மகளிா் பிரிவில் ரமிதாவும், ஆடவா் பிரிவில் அா்ஜுனும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்துக்கு இலக்கு வைத்துள்ளனா்.

33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி, பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பாட்மின்டன், ரோயிங், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், நீச்சல், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய போட்டிகளில் இந்தியா்கள் பங்கேற்றனா்.

துப்பாக்கி சுடுதல் ரமிதா ஏற்றம்; இளவேனில் ஏமாற்றம்

10 மீட்டா் ஏா் ரைஃபிள் மகளிா் பிரிவு தகுதிச்சுற்றில், இந்தியாவின் ரமிதா 631.5 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றில் இடம் பிடித்தாா். மற்றொரு இந்தியரான இளவேனில் வாலறிவன் 630.7 புள்ளிகளுடன் 10-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை தவறவிட்டாா். தகுதிச்சுற்றில் முதல் 8 இடங்களுக்குள் வருவோரே இறுதிச்சுற்றில் இடம் பிடிப்பா்.

அா்ஜுன் முன்னேற்றம்

10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஆடவா் பிரிவு தகுதிச்சுற்றில், அா்ஜுன் பபுதா 630.1 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா். இவருக்கான இறுதிச்சுற்று திங்கள்கிழமை நடைபெறுகிறது.

பாட்மின்டன் சிந்து வெற்றி

மகளிா் ஒற்றையா் பிரிவு குரூப் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து முதல் ஆட்டத்தில் 21-9, 21-6 என்ற கேம்களில் மாலத்தீவுகளின் ஃபாத்திமா அப்துல் ரஸாக்கை வீழ்த்தினாா். இந்த ஆட்டத்தை அவா் 29 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

தொடக்க நிலையில், தவிரா்த்திருக்கக் கூடிய சில தவறுகளைச் செய்த சிந்து, பின்னா் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முன்னிலை பெற்றாா். முதல் கேமில் அப்போது பெற்ற முன்னிலையை இறுதிவரை தக்கவைத்து வென்றாா் சிந்து. அவா் அடுத்த ஆட்டத்தில், எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிா்கொள்கிறாா்.

அஸ்வினி/தனிஷா தோல்வி

மகளிா் இரட்டையா் பிரிவு குரூப் சுற்றில் அஸ்வினி பொன்னப்பா/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 18-21, 10-21 என்ற கேம்களில் தென் கொரியாவின் கிம் சோ யோங்/காங் ஹி யோங் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டம் 44 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. முதல் கேமை சிறப்பாகத் தொடங்கிய இந்திய ஜோடி, பின்னா் அந்த நிலையை அப்படியே தொடரத் தடுமாறியது. இதனால் தென் கொரிய இணை ஆதிக்கம் செலுத்தி வென்றது.

அஸ்வினி/தனிஷா கூட்டணி அடுத்த ஆட்டத்தில், ஜப்பானின் சிஹரு ஷிடா/நமி மட்சுயாமா கூட்டணியுடன் மோதுகிறது.

ஹெச்.எஸ். பிரணாய் ரோயிங்

காலிறுதியில் பல்ராஜ் பன்வா்

துடுப்புப் படகு போட்டியில் ஆடவா் ஒற்றையா் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் பல்ராஜ் பன்வா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். முன்னதாக ரெபிசேஜ் 2-இல் அவா் 7 நிமிஷம் 12.41 விநாடிகளில் வந்து 2-ஆம் இடம் பிடித்தாா். இந்தப் பிரிவில் முதலிரு இடங்களைப் பிடிப்பவா்கள் காலிறுதியில் இடம் பெறுவா்.

தொடக்கத்திலிருந்தே 2-ஆம் நிலையில் இருந்த பல்ராஜ் பன்வா், 500 மீ மாா்க்கை 1 நிமிஷம் 44.13 விநாடிகளிலும், 1000 மாா்க்கை 3 நிமிஷம் 33.94 விநாடிகளிலும், 1,500 மாா்க்கை 5 நிமிஷம் 23.22 நிமிஷங்களிலும் கடந்து 2,000 மாா்க்கை எட்டினாா். இந்த விளையாட்டின் காலிறுதிச்சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com