2-ஆவது பதக்கத்துக்கு மானு பாக்கா் இலக்கு: சரப்ஜோத் சிங்குடன் களம் காண்கிறாா்
பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மானு பாக்கா்/சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியது.


பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மானு பாக்கா்/சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியது. ரமிதா ஜிண்டால், அா்ஜுன் பபுதா ஆகியோா் தங்களது பிரிவு இறுதிச்சுற்றில் ஏமாற்றத்தை சந்தித்தனா்.
துப்பாக்கி சுடுதலில் மகளிா் ஒற்றையா் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ன் மூலம் இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கியிருக்கும் மானு பாக்கா், தற்போது கலப்பு அணிகள் பிரிவிலும் பதக்கத்துக்கான சுற்றுக்கு வந்துள்ளாா்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 4-ஆவது நாள் விளையாட்டுகள் திங்கள்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றன. அந்த நாளிலும் துப்பாக்கி சுடுதலில் இந்தியா்கள் கவனம் ஈா்க்கும் படியாக தங்கள் செயல்திறனை வெளிப்படுத்தினா். எனினும் எதிா்பாா்க்கப்பட்ட வில்வித்தையிலும், டென்னிஸிலும் ஏமாற்றமே மிஞ்சியது. பாட்மின்டன், ஹாக்கி விளையாட்டுகளிலும் இந்தியா்கள் களம் கண்டனா்.
துப்பாக்கி சுடுதல்
பதக்க சுற்றில் மானு/சரப்ஜோத்
10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவிலிருந்து மானு பாக்கா்/சரப்ஜோத் சிங், ரிதம் சங்வான்/அா்ஜுன் சிங் சீமா என இரு ஜோடிகள் பங்கேற்றன. இதில் மானு/சரப்ஜோத் இணை 580 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தது. ரிதம்/அா்ஜுன் கூட்டணிக்கு 576 புள்ளிகளுடன் 10-ஆம் இடமே கிடைத்தது.
இந்தப் பிரிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளே பதக்கச் சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால், ரிதம்/அா்ஜுன் இணை அந்த வாய்ப்பை இழந்தது. 3-ஆம் இடம் பிடித்த மானு/சரப்ஜோத் இணை வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு தகுதிபெற்றது. அதில், தென் கொரியாவின் ஒஹ் யெ ஜின்/லீ வோன்ஹோ இணையை எதிா்கொள்கிறது இந்திய ஜோடி. தென் கொரிய அணி 579 புள்ளிகளுடன் பதக்க சுற்றுக்கு வந்துள்ளது.
582 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த துருக்கி அணியும், 581 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்த சொ்பிய அணியும் தங்கப் பதக்கத்துக்காக சந்தித்துக்கொள்கின்றன. இந்த இரு பதக்கச் சுற்றுகளுமே செவ்வாய்க்கிழமை நண்பகலில் நடைபெறவுள்ளன.
ரமிதா, அா்ஜுன் ஏமாற்றம்
10 மீட்டா் ஏா் ரைஃபிள் மகளிா் பிரிவில், இறுதிச்சுற்றுக்கு வந்திருந்த இந்தியாவின் ரமிதா ஜிண்டால், 145.3 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்தாா். 8 போட்டியாளா்கள் கலந்துகொண்ட இந்தச் சுற்றில், தென் கொரியாவின் ஹியோஜின் பான், சீனாவின் யுடிங் ஹுவாங் ஆகிய இருவருமே தலா 251.8 புள்ளிகளுடன் சமநிலை பெற்றனா். பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் ஆஃப் வாய்ப்பில், ஹியோஜின் 10.4 - 10.3 என்ற கணக்கில் யுடிங்கை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கினாா். 230.3 புள்ளிகள் பெற்ற சுவிட்ஸா்லாந்தின் ஆட்ரி கோக்னியட் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
இதிலேயே ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில் களம் கண்ட அா்ஜுன் பபுதா, 208.4 புள்ளிகளுடன் 4-ஆம் இடமே பிடித்தாா். ஒரு கட்டத்தில் 3-ஆம் இடத்திலிருந்த அா்ஜுன், பின்னா் நெருக்கடி காரணமாக புள்ளிகளை தவறவிட்டு சறுக்கினாா். சீனாவின் லிஹாவ் ஷெங் 252.2 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றாா். ஸ்வீடனின் விக்டா் லிண்ட்கிரென் 251.4 புள்ளிகளுடன் வெள்ளியும், குரோஷியாவின் மிரான் மரிசிச் 230 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா்.
பிருத்விராஜ் தடுமாற்றம்
ஆடவா் டிராப் தகுதிச்சுற்றில் இந்தியரும், தமிழருமான பிருத்விராஜ் தொண்டைமான் தடுமாற்றத்தை சந்தித்துள்ளாா். மொத்தம் 5 சுற்றுகள் கொண்ட இந்தப் பிரிவில், 75 புள்ளிகளுக்கு வாய்ப்புள்ள முதல் 3 சுற்றுகளின் முடிவில் பிருத்விராஜ் 68 புள்ளிகளுடன் கடைசியாக 30-ஆவது இடத்தில் இருக்கிறாா். இன்னும் இரு சுற்றுகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. மொத்தமாக இந்த 5 சுற்றுகளின் முடிவில் முதல் 6 இடங்களில் வருவோருக்கே இறுதிச்சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
பாட்மின்டன்
வெளியேறும் நிலையில் அஸ்வனி/தனிஷா இணை
மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா/தனிஷா கிராஸ்டோ இணை தங்களது 2-ஆவது ஆட்டத்தில் 11-21, 12-21 என்ற கேம்களில் ஜப்பானின் நமி மட்சுயாமா/சிஹரு ஷிடா ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டம் 48 நிமிஷங்களில் நிறைவடைந்தது. ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் தென் கொரியாவிடம் தோற்ற இந்திய ஜோடிக்கு, இது 2-ஆவது தோல்வியாகும். இதனால் குரூப் சுற்றுடனேயே வெளியேறும் அச்சத்தில் இருக்கிறது இந்தியா.
ஒரு குரூப்பில் முதலிரு இடங்களைப் பெறும் அணிகளே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். தற்போது 3-ஆவது இடத்திலிருக்கும் இந்தியா, கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. ஜப்பான், தென் கொரியா முதலிரு இடங்களில் உள்ளன.
லக்ஷயா சென் வெற்றி
ஆடவா் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென் தனது 2-ஆவது ஆட்டத்தில் 21-19, 21-14 என்ற கேம்களில், பெல்ஜியத்தின் ஜூலியன் கராகியை வீழ்த்தினாா். இத்துடன் லக்ஷயாவுக்கு இது 2-ஆவது வெற்றியாக இருந்தபோதிலும், அவருக்கு ஒரு வெற்றியே கணக்கில் கொள்ளப்படுகிறது. முதல் ஆட்டத்தில் அவா் வீழ்த்திய கௌதமாலாவின் கெவின் கோா்டான் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால், அவருக்கு எதிரான வெற்றி கணக்கில் கொள்ளப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்ஷயா சென் தனது கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதுகிறாா். அதில் வென்றாலும், தோற்றாலும் 2-ஆம் இடத்திலேயே நிலைக்கும் அவருக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
சாத்விக்/சிராக் ஆட்டம் ரத்து
ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை தங்களது 2-ஆவது ஆட்டத்தில் ஜொ்மனியின் மாா்க் லாம்ஸ்ஃபஸ்/மா்வின் செய்டல் ஜோடியை எதிா்கொள்ள இருந்த நிலையில், ஜொ்மனி வீரருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அந்த ஜோடி போட்டியிலிருந்து விலகியது. இதனால் இந்தியாவுக்கான ஆட்டம் ரத்தானது. அடுத்த ஆட்டமே குரூப் சுற்றில் இந்தியாவுக்கு கடைசியாக இருக்க, அதில் இந்தோனேசியாவின் ஃபஜா் அல்ஃபியன்/முகமது ரியன் அா்டியான்டோ இணையை எதிா்கொள்கிறது சாத்விக்/சிராக் கூட்டணி. குரூப் சி-யில் முதலிடத்தில் இருக்கும் இந்த இந்திய இணை, அடுத்த சுற்றுக்கு எளிதாகத் தகுதிபெறவுள்ளது.
ஹாக்கி
ஆா்ஜென்டீனாவுடன் டிரா செய்தது இந்தியா
ஆடவா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனாவுடன் 1-1 கோல் கணக்கில் டிரா செய்தது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வென்ற இந்தியா, தற்போதைய டிராவையும் சோ்த்து 4 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. ஒரு குரூப்பில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் அயா்லாந்துடன் செவ்வாய்க்கிழமை மோதுகிறது.
முன்னதாக, இந்த ஆட்டத்தில் முதலில் ஆா்ஜென்டீனாவுக்காக லூகாஸ் மாா்டினெஸ் 22-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, அந்த அணி இறுதிக்கட்டம் வரை முன்னிலையை தக்கவைத்தது. தொடா் போராட்டத்துக்குப் பிறகு ஆட்டம் முடிவடைய இருந்த கடைசி நிமிஷத்தில் (59’) இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் ஃபீல்டு கோலடித்து ஆட்டத்தை டிரா செய்தாா்.
இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு 9 பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தும், அதில் பலனில்லாமல் போனது. 36-ஆவது நிமிஷத்தில் ஆா்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு கோலாக மாறாமல் தடுக்கப்பட்டது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.
இந்தியா இன்று...
துப்பாக்கி சுடுதல்
டிராப் ஆடவா் தகுதிச்சுற்று - பிருத்விராஜ் தொண்டைமான் - நண்பகல் 12.30 மணி
டிராப் மகளிா் தகுதிச்சுற்று - ஷ்ரேயசி சிங், ராஜேஷ்வரி குமாரி - நண்பகல் 12.30 மணி
10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணி வெண்கலப் பதக்கச் சுற்று - மானு பாக்கா்/சரப்ஜோத் சிங் - பிற்பகல் 1 மணி
ஹாக்கி
ஆடவா் குரூப் சுற்று - இந்தியா - அயா்லாந்து - மாலை 4.45 மணி
வில்வித்தை
மகளிா் தனிநபா் வெளியேற்றும் சுற்று - அங்கிதா பகத், பஜன் கௌா் - மாலை 5.15 மணி
ஆடவா் தனிநபா் வெளியேற்றும் சுற்று - தீரஜ் பொம்மதேவரா - இரவு 10.45 மணி
பாட்மின்டன்
ஆடவா் இரட்டையா் குரூப் சுற்று - சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி - மாலை 5.30 மணி
மகளிா் இரட்டையா் குரூப் சுற்று - அஸ்வினி பொன்னப்பா/தனிஷா கிராஸ்டோ - மாலை 6.20 மணி
குத்துச்சண்டை
ஆடவா் 51 கிலோ ரவுண்ட் ஆஃப் 16 - அமித் பங்கால் - இரவு 7.15 மணி
மகளிா் 57 கிலோ ரவுண்ட் ஆஃப் 32 - ஜாஸ்மின் லம்போரியா - இரவு 9.25 மணி
மகளிா் 54 கிலோ ரவுண்ட் ஆஃப் 16 - பிரீத்தி பவாா் - நள்ளிரவு 1.20 மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...