என்ன ஆச்சு சாம்பியன் அணிக்கு?: தொடர்ந்து 5 டி20 தொடர்களில் ஆஸ்திரேலியா தோல்வி

வங்கதேசத்துக்கு எதிராக மட்டுமல்ல, ஆஸி. அணிக்குக் கடந்த ஒரு வருடத்தில் 5 டி20 தொடர்களில் தொடர்ச்சியாக தோல்வி கிடைத்துள்ளது...
ஆரோன் ஃபிஞ்ச்
ஆரோன் ஃபிஞ்ச்

மிகச்சிறந்த டி20 வீரர்களைக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து 5 டி20 தொடர்களில் தோல்வியடைந்தது என்றால் யாரால் நம்ப முடியும்?

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் தோற்று, மிகப்பெரிய சங்கடத்தை எதிர்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை வென்று டி20 தொடரைக் கைப்பற்றி சாதனை செய்துள்ளது வங்கதேச அணி. இதற்கு முன்பு எந்தவொரு தொடரிலும் ஆஸ்திரேலியாவை வங்கதேசம் வென்றதில்லை. இதற்கு முன்பு நான்கு முறை டி20 உலகக் கோப்பையில் மட்டுமே இரு அணிகளும் மோதியுள்ளன. இந்நிலையில் ஆஸி. அணியுடன் மோதிய முதல் டி20 தொடரிலேயே வங்கதேச அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் இலக்கை விரட்டும்போது தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் ஆஸி. அணிக்குத் தோல்வி கிடைத்துள்ளது. அதிலும் வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய 3-வது டி20 ஆட்டத்தில் 128 ரன்கள் இலக்கைக் கூட அதனால் வெற்றிகரமாக அடையமுடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் ஆஸி. அணி முதல்முறையாக 130 ரன்களுக்கும் குறைவான இலக்கை அடைய முடியாமல் தோல்வியடைந்துள்ளது. முதல் டி20யில் 108 ரன்களும் 2-வது டி20யில் 121/7 ரன்களும் எடுத்தது ஆஸி அணி. 3-வது டி20யிலும் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி அணிக்குத் தோல்வியைத் தேடித் தந்துள்ளார்கள்.

வங்கதேசத்துக்கு எதிராக மட்டுமல்ல, ஆஸி. அணிக்குக் கடந்த ஒரு வருடத்தில் 5 டி20 தொடர்களில் தொடர்ச்சியாக தோல்வி கிடைத்துள்ளது என்பதை எந்த கிரிக்கெட் ரசிகரால் நம்பமுடியும்? 5 தொடர்களில் விளையாடிய 19 டி20 ஆட்டங்களில் 5-ல் மட்டுமே வென்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி: கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்கள்

இங்கிலாந்து: 1-2 (வெளிநாடு)
இந்தியா: 1-2 (சொந்த மண்ணில்)
நியூசிலாந்து: 2-3 (வெளிநாடு)
மே.இ. தீவுகள்: 1-4 (வெளிநாடு)
வங்கதேசம்: 0-3 (வெளிநாடு)*

வங்கதேசத்துக்கு எதிரான தொடர்களில் வேண்டுமானால் வார்னர், ஸ்மித், கேப்டன் ஃபிஞ்ச் போன்றோர் கலந்துகொள்ளவில்லை எனலாம். ஆனால் இதர தொடர்களில் முக்கிய வீரர்கள் விளையாடியும் தோல்வியையே சந்தித்துள்ளது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் ஆஸி. அணி என்ன செய்யும்? 2007 முதல் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையை இதுவரை ஆஸ்திரேலியா வென்றதே இல்லை. 2010-ல் 2-ம் இடம் பிடித்தது. இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்திலும் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவிலும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்படி மோசமாக விளையாடினால் ஆஸி. அணியால் இந்தப் போட்டிகளில் என்ன சாதிக்க முடியும்? மேலும் பல அதிர்ச்சிகள் அந்த அணிக்குக் காத்திருக்கிறதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com