குடும்பத்துக்காக சச்சின் டெண்டுல்கர் விடுப்புக் கடிதம் எழுதியபோது....

என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். பள்ளி விடுமுறைக்கான நேரமிது.
குடும்பத்துக்காக சச்சின் டெண்டுல்கர் விடுப்புக் கடிதம் எழுதியபோது....


2012-ல் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடியது இந்திய அணி. (இப்போதெல்லாம் டி20 ஆட்டங்களை விட ஒருநாள் ஆட்டங்கள் அதிகமாக ஆடப்படுகின்றனவா?) 

இலங்கைச் சுற்றுப்பயணத்தில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கவில்லை. அதற்கு முன்பு சிபி சீரீஸ், ஆசியக் கோப்பை ஆகிய போட்டிகளில் சச்சின் பங்கேற்றார். அதன்பிறகு இந்திய அணி இலங்கைக்குச் சென்றது. 

இலங்கைச் சுற்றுப்பயணத்தில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பிசிசிஐக்கு அவர் கடிதம் எழுதினார். அதில் கூறியதாவது:

என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். எனவே பிசிசிஐயிடம் கோரிக்கை வைக்கிறேன். பள்ளி விடுமுறைக்கான நேரமிது. இலங்கைக்குச் செல்வதாக இருந்தால் இந்நேரம் என் பயிற்சியை ஆரம்பித்திருப்பேன். ஆனால் என் குழந்தைகளுடன் இந்த நேரத்தை நன்கு செலவழிக்க விரும்புகிறேன். ஏனெனில் இதற்குப் பிறகு அடுத்த 10 மாதங்களுக்குத் தொடர்ச்சியாக விளையாடப் போகிறேன். பள்ளி நாள்கள், வார இறுதி நாள்களில் நேரத்தைச் செலவழிப்பதை விடவும் விடுமுறைகள் வேறுவகையானவை என்றார். 

சச்சினின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. சச்சின் இன்றி இலங்கை சென்ற தோனி தலைமையிலான இந்திய அணி டி20 தொடரையும் ஒருநாள் தொடரையும் எளிதாக வென்றது. 

இந்த விடுப்புக் கடிதத்தை 2012, ஜூலையில் எழுதினார் சச்சின். எனினும் அதற்கு முன்பே அவருடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. 2012 மார்ச்சில் ஆசியக் கோப்பைப் போட்டியில் 100-வது சர்வதேச சதம் அடித்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் பயணத்தை எவ்வித முன்னறிவிப்புடன் சச்சின் முடித்துக்கொண்டார். இந்த விடுப்புக் கடிதம் எழுதிய 16-வது மாதத்தில் 200-வது டெஸ்டில் விளையாடியதுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.

இச்சம்பவத்தை இப்போது குறிப்பிடுவதற்குக் காரணம்?

குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மகள் வாமிகாவின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குத் திரும்பவுள்ளதால் ஒருநாள் தொடரிலிருந்து விலகும் முடிவை கோலி எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எனினும் இதுகுறித்த முறையான அறிவிப்பு கோலி, பிசிசிஐயிடமிருந்து இதுவரை வரவில்லை. 

குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவேண்டுமா, இந்திய அணி மீது அவருக்கு அக்கறை இல்லையா என ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால், கோலிக்கு முன்பே இந்திய கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. விடுப்புக் கடிதம் எழுதும் முதல் நபர் கோலி இல்லை என்பதை மேலே உள்ள சம்பவம் உறுதிபடுத்துகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com