உயரம் தாண்டி உயரம் தொடும் மாரியப்பன் தங்கவேலு

இப்போதே அடுத்த பாராலிம்பிக்ஸ் தங்கத்துக்குக் குறி வைத்திருக்கிறார்...
உயரம் தாண்டி உயரம் தொடும் மாரியப்பன் தங்கவேலு

ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் டி63  போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் - மாரியப்பன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 1.88 மீ. உயரம் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். இதையடுத்து 1.86 மீ. உயரம் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

மேலும் உயர உயரப் பறக்கிறார். மாரியப்பன் தங்கவேலு எப்போதும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்துகிறார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். அவருடைய சாதனைக்காக இந்தியா பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பெரிய வடகம்பட்டி கிராமத்திலுள்ள மாரியப்பனின் தாய் சரோஜா, உறவினா்கள், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினா். மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் பெற்றது குறித்து அவருடைய தாய் சரோஜா கூறியதாவது: சென்ற முறை போலவே (ரியோ பாராலிம்பிக்) இந்தப் போட்டியிலும் மாரியப்பன் தங்கம் வெல்வாா் என ஆவலுடன் எதிா்பாா்த்தோம். ஆனால் அங்கு பெய்த மழை காரணமாக தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். எனினும் நாட்டுக்காக அவா் மீண்டும் பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியே. அடுத்தடுத்து பதக்கங்களை வென்று எங்கள் கிராமத்தின் பெயரை உலகறியச் செய்துள்ள மாரியப்பன், நிச்சயமாக அடுத்த முறை தங்கம் வெல்வாா் என்றாா்.

வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

வெள்ளி வென்ற பிறகு பேசிய மாரியப்பன், ‘உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருக்க முடியும். அதை இலக்காகக் கொண்டே பாராலிம்பிக்கிற்கு வந்தேன். ஆனால், மழை காரணமாக அந்த முயற்சி தவறியது. முதலில் லேசான சாரலாக இருந்தது, 1.80 மீட்டா் முயற்சியின்போது கன மழையாகப் பெய்தது. எனது பாதிக்கப்பட்ட காலில் இருந்த காலுறை நனைந்து ஈரமாகியதால் குதிப்பது சற்று கடினமாக இருந்தது. பாரீஸ் பாராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கம் வெல்ல முயற்சிப்பேன்’ என்றாா்.

மாரியப்பன் ஒரே நாளில் சூப்பர்ஸ்டார் ஆன தினம் - செப்டம்பர் 9, 2016. 

அந்த நாளை மாரியப்பனால் மறக்கவே முடியாது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற 2016 பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனையோடு தங்கம் வென்றது இந்த நாளில் தான். 

அந்தத் தருணம் அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அன்று முதல் அவர் ஒரு பிரபலம். 

இந்தியாவுக்குப் பெருமை சோ்த்ததற்காக, கடந்த வருடம் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்திடமிருந்து பெற்றுக்கொண்டார் மாரியப்பன். 1991-92 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கேல் ரத்னாவைப் பெற்ற 2-வது தமிழக வீரர் என்கிற பெருமையும் கூடுதலாக அவருக்குக் கிடைத்தது. 

தங்கம் வென்றவுடன் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 2 கோடி பரிசுத்தொகையை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ரூ. 75 லட்சம் பரிசுத்தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்தார். மாரியப்பனின் இந்த வெற்றிக்கு இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். 

சேலத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மாரியப்பன். 5 வயதில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த மாரியப்பன் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் அவருடைய வலது கால் சிதைந்தது. ‘அதற்குப் பிறகு அந்தக் கால் வளரவேயில்லை. காயங்களும் ஆறவில்லை. என்னுடைய வலது காலுக்கு வயது 5 தான்’ என்கிறார் மாரியப்பன்.

காய்கறி விற்பனை செய்து வந்த அவருடைய அம்மா, மாரியப்பனின் காலைச் சரிசெய்வதற்காக 3 லட்சம் ரூபாய் வரை மருத்துவச்செலவு செய்தார். 

14 வயதில் பள்ளியில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 2-ம் இடம் பிடித்தார். அதிலிருந்துதான் அவருக்கு இந்த விளையாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

2013-ல் தேசிய அளவிலான போட்டியில் மாரியப்பன் கலந்துகொண்டபோது பயிற்சியாளர் சத்யநாராயணனைச் சந்தித்துள்ளார். மாரியப்பனின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய பயிற்சியும் ஒரு முக்கிய காரணம். 

கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள மாரியப்பன் தேர்வாகியிருந்தார். ஆனால், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடைக்க தாமதம் ஆனதால், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அந்தப் போட்டியில் 1.74 மீட்டர் உயரத்தைத் தாண்டியவர் தங்கப் பதக்கத்தை வென்றார். அப்போதைய தகுதிச் சுற்றில் மாரியப்பன் 1.75 மீட்டர் உயரம் தாண்டியிருந்தார். அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால், மாரியப்பனுக்கு ரியோவில் கிடைத்தது 2-வது தங்கமாக இருந்திருக்கும். 

தந்தை இல்லை, காலில் ஏற்பட்ட விபத்து, இளமைப் பருவத்துக்குரிய எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாத வறுமை என பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் விடாமுயற்சியுடன் உழைத்த மாரியப்பன் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்ததுடன், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டுள்ளார்.

2016-ல் மகன் தங்கம் வென்ற பிறகு மாரியப்பனின் தாயார் சரோஜா (50) கூறியதாவது: "எங்களுக்கு சுதா (26) என்ற மகளும், மாரியப்பன் (21), குமார் (20), கோபி (16) ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். மூத்த மகன் மாரியப்பனுக்கு 5 வயது இருக்கும்போது, பேருந்து மோதியதில் வலது கால் பாதம் முழுவதும் சேதமடைந்துவிட்டது. உடனடியாக, அரசு மருத்துவமனையில் சேர்த்து குணமாக்கினோம். வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றபோது, விளையாடுவதற்கு யாரும் தன்னை சேர்த்துக் கொள்ளவில்லை மாரியப்பன் வருந்தினார். பின்னர், அவரின் விளையாட்டு ஆர்வத்தைக் கண்டறிந்த ஆசிரியர்கள், உயரம் தாண்டுதலில் அவரை ஊக்குவித்தனர்.

மாரியப்பன் சிறுவனாக இருக்கும்போதே, அவருடைய தந்தை பிரிந்து சென்று விட்டார். குடும்ப வறுமையைத் தாங்க முடியாமல், அனைவரும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினோம். ஆனால், மாரியப்பன் தான் அதைத் தடுத்து, கண்டிப்பாக வாழ்க்கை சூழ்நிலை வறுமையில் இருந்து மாறும் என்று கூறி எங்களைத் தேற்றினார். பள்ளி விடுமுறை நாள்களில், கட்டுமான வேலைகளுக்குச் சென்று, அதில் கிடைத்த கூலித் தொகையில் தனக்கான செலவையும், குடும்பத்துக்கும் வழங்கினார்' என கண்ணீர் மல்கக் கூறினார்.

18 வயதில் பயிற்சியாளர் சத்யநாராயணாவின் கண்ணில் படும் வரை மாரியப்பனின் வாழ்க்கை போராட்டமாக இருந்துள்ளது. 2012 முதல் 2015 வரை என் குடும்பத்தைக் கரை சேர்ப்பதற்காக எல்லாவிதமான உதவிகளையும் செய்தேன் என பிடிஐ நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார் மாரியப்பன். காலை வேளையில் தினமும் 3 கி.மீ. வரை நடந்து வீடுகளுக்குச் செய்தித்தாள் போடுவது, கட்டுமான வேலைகளுக்குச் செல்வது எனப் பல வேலைகள் செய்து தினமும் ரூ. 200 சம்பாதித்து அதை அப்படியே வீட்டுக்குத் தந்துள்ளார். 

2016-ல் ரியோவில் தங்கம் வென்று சொந்த ஊருக்குத் திரும்பியபோது மாரியப்பனை ஊர்க்காரர்கள் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். 

பெரிய வடகம்பட்டி விழாக்கோலம் பூண்டது. 

சென்னையில் இருந்து, கார் மூலம் சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனைச் சாவடிப் பகுதிக்கு மாலை 3.50 மணிக்கு மாரியப்பன் வந்தார். அவர் காரில் இருந்து இறங்கியதும், அவருடைய நண்பர்கள் தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

அவருடைய தாயார் சரோஜா, கட்டியணைத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வா. சம்பத் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து மாரியப்பனை வரவேற்றார்.

தொப்பூரில் இருந்து தீவட்டிப்பட்டிக்கு வந்த மாரியப்பனுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். அவருடைய வாகனம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது.

மேள தாளம் முழங்க பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட மாரியப்பன், பின்னர் வாகனத்தின் மேல்பகுதியில் அமர்ந்தபடி, சொந்த ஊரான பெரிய வடகம்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றார்.

நடுப்பட்டி, காடையாம்பட்டி, சந்தைப்பேட்டை, விதைப்பண்ணை, டேனிஷ்பேட்டை என மாரியப்பன் சென்ற வழியெங்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆரத்தி எடுத்தும், பூக்களைத் தூவியும் வரவேற்றனர்.

 மேலும், சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். மாரியப்பனுடன், வாகனத்தில் அவரது தாயார் சரோஜாவும் இருந்தார். தன்னுடைய ஏழ்மை நிலைமையைப் போக்கிய, மகனுக்கு ஊர்மக்கள் அளித்த வரவேற்பைக் கண்டு அவர் ஆனந்த கண்ணீர் விட்டார்.

மாலை 5.50 மணிக்கு சொந்த ஊரான பெரிய வடகம்பட்டிக்கு மாரியப்பன் வந்தார். பட்டாசுகள் வெடித்து கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

பெரிய வடகம்பட்டி கிராம எல்லையில் இருந்து, மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாரியப்பனுக்கு அங்கு முதல் மரியாதை செய்யப்பட்டது. இதன்பிறகு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக அவரது வீட்டுக்கு மாலை 6.50 மணிக்கு அழைத்து சென்றனர்.

மாரியப்பனின் சாதனையைப் பாராட்டி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் அனுப்பிய 20 ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. தனது சொந்த ஊருக்குத் திரும்பிய மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியது: ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தங்கப் பதக்கத்தை எனது தாய்க்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

மாரியப்பனின் சாதனையைப் பாராட்டி, அவரது உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. 2016 சாதனைக்குப் பிறகு 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் 2019 உலக பாரா சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெண்கலம் வென்றார் மாரியப்பன். டிசம்பர் 2019-ல் உயரம் தாண்டுதல் தரவரிசையில் உலகின் 2-வது சிறந்த வீரராக மதிப்பிடப்பட்டார். இப்போது டோக்கியோவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

மழையால் 2-ம் முறை தங்கம் வெல்ல முடியாமல் போனாலும் இப்போதே அடுத்த பாராலிம்பிக்ஸ் தங்கத்துக்குக் குறி வைத்திருக்கிறார். 

உயரம் தாண்டி உயரத்தை அடைவது மாரியப்பன் தங்கவேலுக்குப் புதிதா என்ன!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com