லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத்துக்கு வெள்ளிப் பதக்கம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ரஷிய வீரர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளதால் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத் வென்ற...
லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத்துக்கு வெள்ளிப் பதக்கம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Updated on
2 min read

2012 லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டார். இந்தப் போட்டியில் யோகேஷ்வர் தத் 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியாவின் மந்தாக்நரனிடம் தோல்வி கண்டார். மந்தாக்நரன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினால் யோகேஷ்வர் தத்துக்கு "ரெபிசேஜ்' சுற்றில் (வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு) பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மந்தாக்நரன் தனது காலிறுதியில் 0-6 என்ற புள்ளிகள் கணக்கில் 2014 உலக சாம்பியனான ரஷியாவின் சூஸ்லான் லியூட்கோவிச் ரேமோனோவிடம் தோல்வி கண்டார். இதனால் "ரெபிசேஜ்' சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த யோகேஷ்வர் தத், ஏமாற்றத்தோடு வெளியேறினார்.

ஒலிம்பிக்கில் 4-வது முறையாக பங்கேற்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீரர் என்ற பெருமை யோகேஷ்வர் தத்துக்கு உண்டு. ஹரியாணா மாநிலம் சோன்பட் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், லண்டனில் நடைபெற்ற முந்தைய ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற 3-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான யோகேஷ்வர் தத், இந்த முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் சுற்றிலேயே தோற்றது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

ஆனால், ரஷிய வீரர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளதால் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத் வென்ற வெண்கலப் பதக்கம் தற்போது வெள்ளிப் பதக்கமாக மாறியுள்ளது.

2012 லண்டன் ஒலிம்பிக், இந்தியாவுக்கு சிறப்பான போட்டியாக அமைந்தது. இதில் இந்தியா 6 பதக்கம் வென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்கள் வென்ற போட்டி இதுதான். துப்பாக்கிச் சுடுதல் வீரர்களான விஜய்குமார் வெள்ளியும், ககன் நரங் வெண்கலமும், மல்யுத்த வீரர்களான சுஷீல் குமார் வெள்ளியும், யோகேஷ்வர் தத் வெண்கலமும், மகளிர் குத்துச்சண்டையில் மேரிகோம் வெண்கலமும் வென்றனர்.

லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் 60 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் தோல்வி கண்டார். இப்போட்டியில் யோகேஷ்வர் தத் 1-3 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் பெஸிக் குடுகோவிடம் தோல்வி கண்டார். அந்தச் சுற்றிலும் தோற்றாலும், "ரெபிசேஜ்' சுற்றின் மூலம் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

"ரெபிசேஜ்' சுற்றில் (வெண்கலப் பதக்கத்துக்காக போட்டியிடும் சுற்று) யோகேஷ்வர், தனது முதல் சுற்றில் 3-0 என்ற கணக்கில் போர்ட்டோ ரிகோவின் பிராங்க்ளினையும் 2-வது சுற்றில் 3-1 என்ற கணக்கில் ஈரானின் மசூத் இஸ்மெயிலையும் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். 20 நிமிட இடைவெளிகளில் இந்த இரு சுற்றுகளிலும் அவர் வெற்றி கண்டார். பின்னர் நடைபெற்ற 3-வது சுற்றில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய யோகேஷ்வர் 3-1 என்ற வட கொரியாவின் ஜாங் மியாங்கை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது பெரிய அளவில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. 6 ஆயிரம் பேருடைய ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் 150 நிபுணர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டன. தினமும் 400 பேரின் மாதிரிகளில் 240 வகையான சோதனைகள் நடத்தப்பட்டன. பதக்கம் வென்ற ஒவ்வொருவரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் யோகேஷ்வர் தத்தைத் தோற்கடித்த ரஷியாவின் பெஸிக் குடுகோ, ஊக்க மருந்து பயன்படுத்தியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடுகோ, 2013-ல் ஒரு கார் விபத்தில் இறந்துபோனார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு, பாதுகாத்து வைக்கப்பட்ட குடுகோவின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதுபோல பரிசோதனை செய்வது நடைமுறை வழக்கம். உடனே கண்டுபிடிக்கமுடியாத ஊக்க மருந்துகளை வீரர்கள் உட்கொள்வதால் இதுபோல நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை நடத்தப்படுவது நடைமுறைகளில் ஒன்று.

இதில் குடுகோ உள்ளிட்ட 5 லண்டன் ஒலிம்பிக் வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் குடுகோ வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால் தற்போது அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள யோகேஷ்வர் தத் வெள்ளிப் பதக்கம் பெறும் வாய்ப்பு உருவானது. 

இந்நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. யோகேஷ்வர் தத் இத்தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வெள்ளிப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com