கார்ல்சன்: வெல்ல முடியாத ராஜா!

இன்னும் அடுத்த ஐந்து, ஆறு வருடங்களுக்கும் கார்ல்சனே உலக சாம்பியனாக நீடிக்கப் போகிறாரா?
கார்ல்சன்: வெல்ல முடியாத ராஜா!

இந்தமுறையும் உலக செஸ் போட்டியை வென்று மூன்றாவதுமுறையாக மகுடம் சூடியுள்ளார் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன். செஸ் உலகின் தன்னிகரற்ற வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.  

‘நான் நிச்சயம் உலக சாம்பியன் ஆவேன். அதற்கான முயற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவேன்’ என்று 13 வயதில் சொன்னார் கார்ல்சன். கிளாசிகல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று வகைப் போட்டிகளிலும் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று சொன்ன வாக்கைக் காப்பாற்றியுள்ளார். இளம் வயதிலேயே உலகின் நெ.1 வீரர், உலக சாம்பியன் என அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டதால் அவரை ஜீனியஸ் என்று செஸ் உலகம் கொண்டாடுகிறது. இந்த ஹாட்ரிக் வெற்றி கார்ல்சனின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. கர்ஜாகினாலும் இந்த மலையைச் சாய்க்கமுடியவில்லை.  

கார்ல்சனிடம் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்வி - வெற்றி ரகசியம். ‘எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டில் சிறப்பாக ஆடுகிறேன். அவ்வளவுதான். நான் ஒன்றும் ஜீனியஸ் கிடையாது’ என்கிறார். ‘என்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் கேம்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். என் நினைவில் செஸ் போர்டைக் காட்சிப்படுத்திக்கொள்வேன். அதில் காய்களை நகர்த்தி விளையாடிப் பார்ப்பேன். இதுதான் என் பலம்’ என்கிறார்.     

1990-களில் இந்தியாவில் எப்படி ஆனந்த் ஒரு பெரிய அலையை உண்டாக்கினாரோ, அதேபோல மாற்றத்தை நார்வேயில் கொண்டுவந்துள்ளார் கார்ல்சன். நார்வேயில் செஸ்ஸை விடவும், குளிர்கால விளையாட்டுகளில்தான் (விண்டர் ஸ்போர்ட்ஸ்) மக்களுக்கு ஆர்வம் அதிகம். கார்ல்சனின் வெற்றிக்குப் பிறகு அங்கு செஸ்ஸை விரும்பி ஆடிவருகிறார்கள் இளைஞர்கள். செஸ் வீரராக மட்டுமில்லாமல் மாடலாகவும் இருப்பதால், அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் கார்ல்சன். நார்வே இளைஞர்களுக்கு ஒரு பெரிய முன்னுதாரணமாக உள்ளார். ‘Magnus Carlsen’s Last Big Title’ என்கிற கார்ல்சன் பற்றிய ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கார்ல்சனின் வெற்றிப் பாதை அழகாக விவரிக்கப்பட்டிருக்கும்.  

12 வயதுவரை செஸ், கால்பந்து என இரு விளையாட்டுகளிலும் ஈடுபட்டுவந்தார் கார்ல்சன். கால்பந்தில் சாதிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் செஸ்ஸில் தான் மூளை அதிகமாக வேலை செய்தது. அதில்தான் நிறைய வெற்றிகள் கிடைத்தன. 8 வயதிலிருந்து செஸ்ஸை மும்முரமாக ஆட ஆரம்பித்த கார்ல்சன், 13-வது வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனார். 16-வது வயதில் ஒரு பெரிய முடிவு ஒன்றை எடுத்தார். இனி பள்ளிக்குப் போகமாட்டேன். முழு நேரமும் செஸ்தான் என்றார். வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. 

“எல்லாம் கார்ல்சனின் முடிவு. செஸ்ஸில் அவனால் சாதிக்கமுடியும் என்று நம்பியதால் நாங்களும் அதைத் தடுக்கவில்லை. கார்ல்சன்மீது எனக்குப் பெரிய கனவு இருந்ததில்லை. மிகவும் மும்முரமாக செஸ் ஆடியகாலகட்டத்திலும் கூட கிராண்ட் மாஸ்டரானால் போதும் என்றுதான் நினைத்தேன். அதற்குப் பிறகு கிடைத்ததெல்லாம் போனஸ்தான் என்கிறார் கார்ல்சனின் தந்தை ஹென்ரிக். பெற்றோர்களுக்கு என் ஆலோசனை, உங்கள் குழந்தைகளை அவர்களின் விருப்பத்துக்கே விடுங்கள். வெற்றி கிடைக்க தாமதமானாலும் அதுவே சரியான முடிவாக இருக்கும் என்று மற்ற பெற்றோர்களுக்கு ஆலோசனையும் தருகிறார். 

இதுவரையிலான செஸ் உலக சாம்பியன்களில் 90 சதவிகிதம் பேர் ரஷ்யர்கள். நார்வேயிலிருந்து ஒரு சூப்பர் உலக சாம்பியன் உருவாகமுடியும் என்று நிரூபித்துள்ளார் கார்ல்சன். 23 வயதிலிருந்து செஸ் உலகையே தன் காலடிக்குள் வைத்துள்ளார். 13 வயதில் கிராண்ட் மாஸ்டர் (ஃபிஷர்  15 வயதிலும் காஸ்பரோவ் 17 வயதிலும் கிராண்ட்மாஸ்டர் ஆனார்கள்.), 19 வயதில் உலகின் நெ.1 வீரர், 23 வயதிலிருந்து உலக சாம்பியன் என அதிரடியாகச் சாதித்துக்கொண்டு வருகிறார். 

கடந்த இருமுறையும் ஆனந்துடன் மோதினார். சென்னையில் நடந்த போட்டியை தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். இதில் 6.5-3.5 என்ற புள்ளிக்கணக்கில் அட்டகாசமாக வெற்றி பெற்று ரசிகர்களை ஏமாற்றினார் கார்ல்சன். அடுத்தமுறையும் ஆனந்தே போட்டியாளராக வந்தார். உண்மையில் 2014-ல் நடந்த இந்தப் போட்டியில் ஆனந்த் தான் வெற்றி பெற்றிருக்கவேண்டும். ஆனால் ஒரு முக்கியமான கட்டத்தில் ஆனந்த் செய்த ஒரு தவறால் நல்ல வாய்ப்பை இழக்க நேர்ந்தது. தப்பிப்பிழைத்த கார்ல்சன், 6.5-4.5 என வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனார்.

இந்த வருடம் புதிய போட்டியாளர். ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின். ஆரம்பத்தில் 7 சுற்றுகள் வரை அனைத்தும் டிரா ஆன நிலையில் 8-வது சுற்றை வென்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கர்ஜாகின். இதனால் இந்தமுறை புதிய செஸ் உலக சாம்பியன் கிடைக்கப்போகிறார் என்றே எதிர்பார்ப்பு நிலவிவந்தது. ஆனால் 10-வது சுற்றில் பதிலடி கொடுத்து புள்ளிகளைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார் கார்ல்சன். அடுத்த இரு சுற்றுகளும் டிரா ஆக, கடைசியில் டை பிரேக்கர் முறையில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ளார் கார்ல்சன். 

சென்ற தலைமுறை, புதிய தலைமுறை என இரு தரப்பு வீரர்களும் உலக செஸ் போட்டியில் கார்ல்சனுடன் மோதிவிட்டார்கள். ஆனால் இந்தச் சக்தியை அசைப்பது அவ்வளவு எளிதல்ல என்றே நிரூபிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு அழுத்தங்கள் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வந்துவிடுகிறார் கார்ல்சன். வெல்ல முடியாதவராக உள்ளார். செஸ் உலகம், கார்ல்சன் என்கிற இந்தப் பலம்வாய்ந்த ராஜாவை எப்போது தாண்டிச் செல்லப்போகிறது? அடுத்தச் சிலவருடங்களில் அது சாத்தியமாகும் வாய்ப்பு உண்டா? இல்லை, இன்னும் அடுத்த ஐந்து, ஆறு வருடங்களுக்கும் கார்ல்சனே உலக சாம்பியனாக நீடிக்கப் போகிறாரா? சுவாரசியமான தருணங்கள் காத்திருக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com