
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இளம் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். சிக்குன்குனியா காய்ச்சல் காரணமாக நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேநேரத்தில் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், ஷிகர் தவன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் உடற்தகுதி பிரச்னை காரணமாக அணியில் இடம்பெறவில்லை. மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விலகியுள்ளார்.
புவனேஸ்வர் குமார் உடற்தகுதி அடைந்தபின்பும் அவரைத் தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை. தனது உடற்தகுதியை முதல்தர கிரிக்கெட்டில் நிரூபிக்கவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட்டில் உண்டான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு முக்கியமான வீரர்கள் உடற்தகுதியைப் பயிற்சியின்போது நிரூபித்தால்போதும், அவர்களை அணியில் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால் கடந்த சிலவருடங்களாக உடற்தகுதி விஷயத்தில் பிசிசிஐ மிகவும் கண்டிப்பாக உள்ளது. அதன் ஒருபகுதியாக இதைப் பார்க்கலாம்.
இது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியதாவது: ரோஹித் காயமடைந்ததை அனைவருமே தொலைக்காட்சியில் பார்த்தோம். அவர், இங்கிலாந்து சென்று தனது காயம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருக்கும். அவரை இந்தத் தொடருக்கு நாங்கள் பரிசீலிக்கவில்லை. குறைந்தபட்சம் அவர் காயத்திலிருந்து மீள்வதற்கு 6 முதல் 8 வாரங்கள் ஆகலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்பட்சத்தில் அவருக்கு கூடுதலாக ஓய்வு தேவைப்படும். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயத்திலிருந்து மீண்டுவிட்டார். எனினும் அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என தேர்வுக்குழு விரும்பியது. ராகுல், தவன் ஆகியோரும் புவனேஸ்வர் குமாரைப் போன்று ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.
முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.