

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றி இது.
அந்த அணியின் டெஸ்ட் அணியில் டிவில்லியர்ஸ், ஆம்லா, டேல் ஸ்டெய்ன் ஆகிய மூவரும் மிகமிக முக்கியமான வீரர்கள். இவர்களின்றி அந்த அணியால் ஒரு டெஸ்ட் போட்டியில் அதுவும் அந்நிய மண்ணியில் ஜெயிக்கமுடியாது என்றுதான் அனைவரும் எண்ணிவந்தார்கள். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றிகாணவேண்டும் என்கிற நெஞ்சுரம் படைத்த வீரர்களால் பெர்த் வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றியை கிரிக்கெட் உலகம் ஆச்சர்யமாகப் பார்க்கிறது. வேறு எந்த அணியால் நட்சத்திர வீரர்களின் பங்களிப்பின்றி ஆஸி. மண்ணில் இப்படியொரு வெற்றியைப் பெற்றிடமுடியும்?
முழங்கையில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அக்டோபர் 3 அன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் டி வில்லியர்ஸ். அவர் 2 மாதங்கள் போட்டிகளில் இருந்து விலகி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டி வில்லியர்ஸின் இடது முழங்கையில் ஏற்பட்டது. இதையடுத்து முடநீக்கியல் நிபுணர்கள் தகுந்த சிகிச்சை அளித்தார்கள். எனினும், அவரால் முழுமையாக காயத்தின் வலியில் இருந்து மீள முடியவில்லை. எந்த முயற்சிகளும் பலன் தராததை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து ஓய்வு எடுக்கும் டி வில்லியர்ஸ், கிறிஸ்துமஸை ஒட்டி நடைபெறும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. டி வில்லியர்ஸ் விலகல் காரணமாக, டூ பிளெஸ்ஸிஸ் தெ.ஆ. கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
டேல் ஸ்டெயினின் நிலைமை இன்னும் மோசம். ஆஸ்திரேலியாவில் ஸ்டெயினின் உதவியின்றி தொடரை வெற்றிகாணமுடியுமா? முடியும் என்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்கள் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில், டேல் ஸ்டெயின் தனது 13-வது ஓவரை வீசியபோது அவருடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஓவரில் 4 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் மைதானத்திலிருந்து வெளியேறிய ஸ்டெயின், பின்னர் களத்துக்கு திரும்பவில்லை. மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருடைய வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளர் முகமது மூசாஜீ கூறுகையில், "காயம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காக ஸ்டெயின் தென் ஆப்பிரிக்கா செல்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து ஸ்டெயின் விலகியுள்ளார் என்றார். ஆஸி அணி 1 விக்கெட்டை இழந்த சமயத்தில், 38-வது ஓவரை வீசிய ஸ்டெய்ன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதனால் தென் ஆப்பிரிகாவுக்குப் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிளாண்டர் தலைமையில் அற்புதமாகப் பந்துவீசி ஆஸியை தங்கள் வழிக்குக் கொண்டுவந்தது தெ. ஆ. அணி. 70.2 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸி. அணி. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் பிளாண்டர் 4 விக்கெட்டுகளையும், மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்தனர்.
முன்னணி பேட்ஸ்மேனான ஆம்லா, இந்த டெஸ்ட் போட்டியில் மிகவும் சொதப்பினார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். அடுத்த இன்னிங்ஸில் 1 ரன்னில் அவுட் ஆனார். அவ்வளவுதான். அணியில் டிவில்லியர்ஸ் இல்லாத நிலையில் ஆம்லாவும் சொதப்பினார். ஆனால் இதுபோன்ற எவ்வித தடங்கல்களும் தென் ஆப்பிரிக்க அணியைப் பாதிக்கவில்லை. ஆஸி. அணியின் 2-வது இன்னிங்ஸில் பிளாண்டர், ரபடா, மஹாராஜ் ஆகிய மூன்று பேர் மட்டுமே அதிக ஓவர்கள் வீசி வெற்றிக்கனியைப் பறித்தார்கள்.
ஓர் அணியில் எந்தவொரு வீரர் இல்லாவிட்டாலும் பங்களிக்காமல் போனாலும் காயத்தால் வெளியேறினாலும் அதனால் அணியின் தீவிரம் குறையக்கூடாது, ஜெயிப்பதே உயிர்மூச்சு.. என்கிற பாடத்தை மற்ற அணிகளுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.