கேட்லினிடம் தங்கத்தை பறிகொடுத்தார் போல்ட்

உலகின் மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

உலகின் மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 3-ஆவது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் 9.92 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தையும், மற்றொரு அமெரிக்க வீரரான கிறிஸ்டியான் கோல்மான் 9.94 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆவது இடத்தையும் பிடித்து முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட உசேன் போல்ட், 9.95 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ஆவது இடத்தையே பிடித்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.
இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு தடகளத்திலிருந்து ஓய்வு பெறவுள்ள உசேன் போல்ட்டால் தங்கம் வெல்ல முடியாமல் போனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. எனினும் ரசிகர்கள் உசேன் போல்டுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து கரகோஷம் எழுப்பியது மைதானத்தை அதிர வைத்தது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உசேன் போல்ட், "முதலிடத்தைப் பிடிக்க முடியாமல் போனதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
ஆடவர் 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் இன்றளவும் உசேன் போல்ட் வசமே உலக சாதனை உள்ளது. கடந்த 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் தங்கம் வென்றுள்ளார் உசேன் போல்ட். இதேபோல் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளாக உசேன் போல்ட் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com