வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

வரலாற்று வெற்றி: டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வங்கதேசம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது...

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:46 pm

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இரு அணிகளுக்கு இடையே டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 78.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம், 2-ஆவது இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 265 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. வார்னர் 75, ஸ்டீவன் ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைய இன்னும் 156 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததாலும் வார்னர் களத்தில் தொடர்ந்ததாலும் ஆஸ்திரேலியாவின் வெற்றியே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. 3-வது விக்கெட்டுக்குப் பிரமாதமாக விளையாடிய வார்னரும் ஸ்மித்தும் 162 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பிறகு 121 பந்துகளில் வார்னர் சதமடித்தார். இது அவருடைய 19-வது டெஸ்ட் சதமாகும். எதிர்பாராதவிதமாக 112 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார். பிறகு, ஸ்மித் 37 ரன்களில் வெளியேறினார். இதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் திணறல் தொடங்கியது.

உணவு இடைவேளையின்போது 57 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளைக்குப் பிறகு ஷகிப் அல்ஹசன் வீசிய முதல் பந்தில் போல்ட் ஆகி 14 ரன்களில் வெளியேறினார் மேக்ஸ்வெல். இதனால் 199 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இதன்பின்னர் லயன் - கம்மின்ஸ் ஆகிய இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார்கள். பிறகு மெஹைதி ஹசன் மிராஸ் பந்துவீச்சில் லயன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் மீதமுள்ள நிலையில் 37 ரன்கள் தேவை என்பதால் பரபரப்பான கட்டத்தை அடைந்த டெஸ்ட் போட்டி. கடைசிக்கட்டத்தில் கம்மின்ஸ் சிக்ஸர்கள் அடித்து வங்கதேச அணிக்கு நெருக்கடி அளித்தார். எனினும் ஹேஸில்வுட் விக்கெட்டை இஸ்லாம் வீழ்த்தியதால், தனது 2-வது இன்னிங்ஸில் 70.5 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி. 20 ரன்களில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 28 ஓவர்களில் 85 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 17-ஆவது முறையாகும். இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் மெஹைதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.