கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்: புணே-வில் நாளை தொடக்கம்

நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளை பந்தாடியிருக்கும் பலம் வாய்ந்த இந்திய அணியை...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:04 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை புணே-வில் தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியை, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி எதிர்கொள்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 23 முதல் 27-ஆம் தேதி வரை புணேவில் நடைபெறவுள்ளது. 2-ஆவது போட்டி மார்ச் 4 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 16 முதல் 20-ஆம் தேதி வரை ராஞ்சியிலும், 4-ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 25 முதல் 29-ஆம் தேதி வரை தர்மசாலாவிலும் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு மீண்டுமொரு முறை ஆஸ்திரேலியாவை இந்திய மண்ணில் தோற்கடிக்க இந்த டெஸ்ட் தொடர் நல்ல வாய்ப்பாகும். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சி செய்வார்கள். இதனால் இந்த டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரை 3-0 அல்லது 4-0 என்கிற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலியா வென்றால் அந்த அணி தரவரிசையில் முதலிடத்துக்கு வந்துவிடும். அதேநேரத்தில் கடைசியாக விளையாடிய தொடர்களில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளை பந்தாடியிருக்கும் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. 

கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் பலமான அணியாகவே உள்ளது. இந்திய அணியில் வழக்கம்போல் முரளி விஜயும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டரில் சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பின்வரிசையில் அஸ்வின், விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இந்தப் போட்டியில் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது என கோலி முடிவு செய்தால், 5-ஆவது பெளலராக ஜெயந்த் யாதவ் இடம்பெறுவார்.

வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணியும் பலம் சேர்க்கிறது. 3-ஆவது சுழற்பந்து வீச்சாளராக ஜெயந்த் யாதவ் இடம்பெறுவார் என தெரிகிறது.

முழங்கால் காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிராக ஆடும் வாய்ப்பை இழந்த சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக அந்தப் போட்டியில் விளையாடிய குல்தீப் யாதவ், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்கிறார். முழங்கால் காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, அதிலிருந்து மீண்டு கொண்டிருந்தார். இந்நிலையில், அவரது தந்தையின் மறைவு காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான அணியில் தேர்வாகி விளையாடாத போதிலும், தமிழக வீரரான அபினவ் முகுந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அணியிலும் இடம்பிடித்துள்ளார். 

எதிர்வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வதற்கு சிறப்பான வியூகங்கள் ஏதும் வகுக்கத் தேவையில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஒவ்வொரு எதிரணியையும் நாங்கள் மதிக்கிறோம். ஆஸ்திரேலிய அணி எத்தகைய நேர்த்தியுடன் விளையாடக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால், இதர அணியைப் போலவே அந்த அணியையும் எதிர்கொள்ள விரும்புகிறேன். அவர்களுடன் மோதுவதற்கென சிறப்பான வியூகம் ஏதும் வகுக்கத் தேவையில்லை என்று கருதுகிறேன். கடந்த 6 முதல் 8 மாதங்களாக எதைச் செய்து வந்தோமோ அதையே இப்போதும் செய்தால் போதும் என்று எண்ணுகிறேன். ஆஸ்திரேலிய அணியானது, நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் நல்ல பவுலர்கள் இருக்கக் கூடிய ஒன்றாகும். அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக ஆடக் கூடியவர்கள். அதை நாங்கள் நன்கு அறிவோம். அதை எதிர்கொள்ளும் விதத்தில் வேண்டியதைச் செய்வோம் என்று அனில் கும்ப்ளே கூறினார்.

ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மேத்யூ ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா ஆசியாவில் விளையாடிய கடந்த 9 டெஸ்டுகளிலும் தோற்றுப்போயிருக்கிறது. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ரென்ஷா, ஷான் மார்ஷ், ஜோஷ் ஹேஸில்வுட், ஸ்டீபன் ஓ"கீப் ஆகியோர் இந்தியாவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார்கள். இதனால் இந்த டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய அணிக்குக் கடும் சவாலாக அமையும்.  

அணி விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், கருண் நாயர், ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த், ஹார்திக் பாண்டியா.

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஜாக்சன் பேர்ட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேஸில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், ஸ்டீபன் ஓ"கீப், மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.