5-ஆவது சீசன் புரோ கபடி: ஹைதராபாதில் இன்று தொடக்கம்

ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
கோப்பையுடன் 12 அணிகளின் கேப்டன்கள்.
கோப்பையுடன் 12 அணிகளின் கேப்டன்கள்.

ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
முதல் நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், இந்த சீசனில் முதல்முறையாக களமிறங்கும் தமிழ் தலைவாஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 2-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணியும், புணேரி பால்டான் அணியும் மோதுகின்றன.
12 நகரங்களில்... கடந்த ஆண்டு வரை 8 அணிகள் பங்கேற்று வந்த புரோ கபடி லீகில் இந்த முறை தமிழகம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இருந்து புதிதாக 4 அணிகள் களமிறங்குகின்றன. இந்த சீசன் மூன்று மாதங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் விளையாடப்படுகின்றன.
சென்னை, ஹைதராபாத், மும்பை, நாகபுரி, ஆமதாபாத், டெல்லி, ராஞ்சி, கொல்கத்தா, ஹரியாணா, லக்னெள, ஜெய்ப்பூர், புணே ஆகிய 12 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
12 அணிகள்... போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புணேரி பால்டான், யு-மும்பா, ஹரியாணா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
'பி' பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யு.பி.யோதா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோதும். அதன்பிறகு 'ஏ' பிரிவில் உள்ள ஒவ்வொரு அணியும், 'பி' பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதன்பிறகு இரு பிரிவுகளில் உள்ள ஒவ்வொரு அணியும் கூடுதலாக ஓர் ஆட்டத்தில் மோதும்.
சூப்பர் பிளே ஆஃப்: குரூப் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதில் 3 தகுதிச் சுற்றுகள், இரண்டு வெளியேற்றும் சுற்றுகள் மற்றும் இறுதி ஆட்டம் என மொத்தம் 6 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இரு பிரிவுகளிலும் முதல் இடங்களைப் பிடிக்கும் அணிகள் 3-ஆவது தகுதிச்சுற்றில் விளையாட தகுதி பெறும். அதில் வெல்லும் அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பளிக்கப்படும். அதாவது அந்த அணி 2-ஆவது வெளியேற்றும் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும்பட்சத்தில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறலாம்.
'ஏ' பிரிவில் 2-ஆவது இடம்பிடிக்கும் அணியும், 'பி' பிரிவில் 3-ஆவது இடம்பிடிக்கும் அணியும் முதல் தகுதிச் சுற்றில் மோதும். 'ஏ' பிரிவில் 3-ஆவது இடம்பிடிக்கும் அணியும், 'பி' பிரிவில் 2-ஆவது இடம்பிடிக்கும் அணியும் 2-ஆவது தகுதிச் சுற்றில் மோதும். மேற்கண்ட இரு தகுதிச் சுற்றில் வெல்லும் அணிகள், முதல் வெளியேற்றும் சுற்றில் விளையாட தகுதி பெறும். அதில் வெல்லும் அணி 2-ஆவது தகுதிச்சுற்றில் பங்கேற்க தகுதி பெறும். இறுதி ஆட்டம் அக்டோபர் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தொடக்க விழா
புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க விழா ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பாட்மிண்டன் வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், குருசாய் தத், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், அல்லு அரவிந்த், ராம்சரண், ராணா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அக்ஷய் குமார் தேசிய கீதம் பாடுகிறார். போட்டி நடைபெறும் 12 நகரங்களிலும் தொடக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com